Sunday, May 3, 2009

ஒரு பானைச் சோற்றுக்கு...

"குமுதம்" 06-05-09 இதழில் காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணாவும் இந்தியக் கட்சியின் மாநிலச் செயளாளர் ("குமுதம்" அப்படித்தான் எழுதியுள்ளது) மகேந்திரனும் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து விவாதித்துள்ளனர்.

கோபண்ணா “1987-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அந்த நாட்டோடு போட்டு, தமிழ்த் தாயகத்தில் தனி தமிழ் மாகாணமாக உருவாகவும், சிங்களவருக்கு இணையாக தமிளர்கள் வாழவும் ராஜீவ் காந்தி முயற்சி எடுத்தார்“ என்று கூறியுள்ளார்.
பிரச்சனை யார் யாருக்கிடையில்? ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்த ஒப்பந்தம் குறித்து எளிய உதாரணத்துடன் விளக்கினார். கணவன்-மனைவிக்கிடையே தகராறு என்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒப்பந்தம் போட்டு நடுவர் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும் "இருவரில் எவரேனும் மீறினால், மீறாதவருடன் நடுவர் இணைந்து மீறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கே நடுவர் கணவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மனைவியை மிரட்டுகிறார்".
இதைக் காட்டிலும் மிக எளிமையாக ராஜீவ் காந்தியின் முட்டாள்தனத்தை விளக்க முடியாது.
மேலும் கோபண்ணா கூறுகிறார்: "இன்றுகூட பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஆயுதத்தைப் போட்டு வந்தால் அதற்கான முயற்சியில் இந்தியா தலையிடத் தயார் என்று ப.சிதம்பரம் உள்பட அனைவரும் கூறிவிட்டனர். "தமிழ் ஈழம் சாத்தியமில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம்."
அட, நாசமாப் போற காங்கிரஸ்காரர்களா! ஆயுதத்தைப் போடச் சொல்ல நீங்கள் யார்? இந்திரா காந்தி ஆயுதம் தரவில்லையா? இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி அளிக்கவில்லையா?
"பங்களாதேஷ்" சாத்தியமானபோது தமிழ் ஈழம் ஏன் சாத்தியமில்லை?
ஆயுதத்தைக் கீழே போடுவது தற்கொலைக்குச் சமம் என்பது தெரியாதா?
"ப.சிதம்பரம் உட்பட" என்றால் என்ன பொருள்?
சீக்கியன் செருப்பு வீசத்தயங்கமாட்டான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த சிதம்பரத்துக்குத் தமிழன் செருப்பைத் தொடமாட்டான் என்ற எண்ணமா?
கோபண்ணாவுக்குத் தமிழன் என்ற உணர்வு இல்லாமலிருக்கலாம். ப.சிதம்பரம் அப்படியா?
நாற்புறமும் கடல் சூழ்ந்துள்ள ஒரு குட்டித் தீவுக்குள்ளிருந்து கொண்டு கொடூரமான சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு செல்வதும் போர்ப்பயிற்சி அளிப்பதும் சமகாலத் தமிழன் சாத்தியமாகியுள்ளது பெருமைக்குரிய விஷயமல்லவா?
முறத்தினால் புலியைத் துரத்தினாளே மறத்தி ஒருத்தி" என்ற பழங்கதைக்குப் பதிலாகப் போர்முனையில் நவீன ஆயுதங்களுடன் வீரப் பெண்கள் என்பதை இன்று ஈழந்தானே செயல்படுத்தியுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக வானூர்தியும் நீர்மூழ்கிக் கப்பலும் உள்ள போராளிக் குழு தமிழனுடையது என்ற பெருமை கோபண்ணாவுக்கு இல்லாதிருக்கலாம்; சிதம்பரத்தின் உள்மனசு பெருமிதம் கொள்ளாதிருக்குமா?
சோனியா கும்பலுக்குச் சேவகம் செஇவது தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களுக்குக் கேவலமாகத் தோன்றவில்லையா?
"புலிகள் தங்கள் சொந்த சகோதர அமைப்புகளையே காலி செய்தவர்கள்" என்னும் கோபண்ணா காங்கிரஸ் வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பே காங்கிரசில் தீவிரவாதிகளை ஓரங்கட்டியவர்கள் மிதவாதிகள். காந்தியின் அரசியல் நடவடிக்கைகளால் மனம் நொந்து வ.வு.சி. அரசியலைவிட்டே ஒதுங்கி மளிகைக்கடை வைக்கப் போனாரே, நினைவில் இருக்கிறதா?
சுதந்திரத்திற்காக மாற்று வழியில் போராடிய பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்றுமாறு நேருவும் சரோஜினி நாயுடுவும் காந்தியை மன்றாடிக் கெஞிக் கேட்டுக் கொண்டும் மறுத்தாரே காந்தி; அது எந்த வகையில் நியாயம்?
நேதாஜியின் வழியைப் புறக்கணித்த காந்தியின் அரசியல் வாரிசுகள் இன்றளவும் வரலாற்றில் இருட்டடிப்பு நடத்துவது தெரியாதா?
சோஷலிஸ்டுகளாகவும் கமூனிஸ்டுகளாகவும் சுதந்திரப் போராட்டத்தில் தியாகிகளாகத் தங்களை அழித்துக் கொள்ளத் தயாராக இருந்தவர்களை சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் நரவேட்டையாடியது மறந்துவிட்டதா?
காங்கிரஸ் செய்யாத படுகொலைகளா? காஷ்மீரில், நாகாலாந்தில், அஸ்ஸாமில், ஆந்திராவில், தமிழ்நாட்டில், இந்தியாவின் பிற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி காவல் துறையையும் ராணுவத்தையும் கொண்டு கொன்று குவித்த அப்பாவிகளின் எண்ணிக்கைக்கு அளவுண்டா?
கோபண்ணாவின் கோமாளித்தனத்துக்கு இன்னுமொரு சான்று: "புலிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக போர்னிறுத்த அறிவிப்பு வர வேண்டும். இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்."
வெட்கங்கெட்ட காங்கிரஸ்காரர்களே! நார்வே நாடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது மறந்து போனதா?
ராஜீவ் காந்தி போராளிகளை ஒடுக்க நினைத்ததோடு இந்திய அமைதிப்படை என்றபெயரில் ஈழத்தில் செய்த அட்டூழியங்களை உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
"தமிழ்நாடு" என்று சென்னை மாநிலப் பெயரை மாற்ற மறுத்த காங்கிரஸ்காரர்கள் இன்று கட்சியையும் மாநிலத்தையும் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரின் பாதங்களில் சமர்ப்பிக்கக் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் இழிநிலையிலிருந்து மீண்டால்தான் தமிழர்கள் என்று சொல்லும் தகுதி ஏற்பட வழியுண்டு.

No comments:

Post a Comment