Monday, March 30, 2009

கோபுர தரிசனம்!

"டேய்! தாத்தா உன்னைப் பாக்கணும்னு ரொம்பவும் ஆசைப்படுறார். போய் ஒரு நாலு நாள் அவர்கூட இருந்துட்டு வாயேன்."

"என்னால நாலு நாள்லாம் இருக்க முடியாதும்மா. எப்படியாவது ரெண்டு நாள் இருந்துட்டு வாரேன்."

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியாள் பிறந்த ஊருக்கு வந்ததுமே தாத்தா அவனை அழைத்துக் கொண்டு போய் ஆண்டாள் கோயிலைச் சுற்றிக் காட்டினார்.

"இந்தக் கோபுரந்தான் தமிழ்நாட்டு அரசாங்க முத்திரையில இருக்குதாக்கும்!" - பெருமை பொங்கக் கூறினார் தாத்தா.

மறுநாள் சூரியன் உதிக்கும் போதே மொட்டை மாடிக்குச் சென்ற தாத்தாவைப் பின் தொடர்ந்தான்.

கோபுரத்தை நோக்கியவாறு இரு கைகளையும் தலைக்கு மேலே தூக்கியவாறு கும்பிட்டுக் கொண்டே ஏதோ ஒரு பாசுரத்தை முணுமுணுத்தார். வழிபாடு முடிந்தது.

மாடியின் ஒவ்வொரு பகுதிக்கும் நகர்ந்து கொண்டிருந்த அவனை வேடிக்கை பார்த்தார் தாத்தா.

"இங்கே கெடைக்கலியே" என்றவன் சற்றுத் தள்ளி நின்று "இங்கேயும் கெடைக்க மாட்டேங்குதே" என்றான்.

"என்னப்பா கெடைக்கலே?"- பரிவுடன் கேட்டார்.

"போங்க தாத்தா, உங்களுக்கு டவர் தெரிஞ்சாப் போதும் நிம்மதி. என் செல்போனுக்கு டவர் கெடைக்கலியே! பேசாம அரசாங்கத்துக்குச் சொல்லி காலத்துக்குத் தகுந்தாப் போல செல்போன் டவரச் சின்னமாப் போடச் சொல்லுங்க. கட்டாயம் எல்லா இடத்துலேயும் கெடைக்க ஏற்பாடு பண்ணுறதுக்கு வழி பிறக்கும். மதச் சார்பற்ற அரசாங்கம்னும் பேர் கிடைக்கும்" என்று பேரன் கூறியது புரியாமல் .

Friday, March 27, 2009

நேர்காணல்

"தேர்தலுக்கு சீட் கேட்டு வந்திருக்கிறியே. உன் பரம்பரை எப்படி?"

"தாத்தா சுதந்திரப் போராட்டத் தியாகி. அப்பா மொழிப் போர்த் தியாகி."

"கட்சியில எவ்வளவு நாளா இருக்குற?"

"என் 18 வயசுல இருந்துங்க. கட்சி நடத்துன ஆறு போராட்டங்கள்லேயும் கலந்து சிறைத் தண்டனை பெற்றிருக்கேனுங்க."

"பண வசதி எப்படி?"

"விண்ணப் படிவம் வாங்குறதுக்கே பலரிடத்துல நன்கொடை பெற வேண்டியதாச்சு."

"சரி. நீ போகலாம். அடுத்த ஆள்..."

கனத்த உடம்புடனும் கனத்த சூட்கேசுடனும் வந்தார் ஒருவர்.

"என்னென்ன தகுதி இருக்கு?"

"என் சாதிக்காரங்க தொகுதியில மெஜாரிட்டி கள்ளச் சாராயம், கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து நம்ம தொழிலுங்க!"

"கட்சியில எப்பச் சேந்தீங்க?"

"இப்பவே சேந்துடறேனுங்க!"

"எவ்வளவு செலவழிக்க முடியும்?"

"இப்போதைக்கு ஒரு வோட்டுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்கலாமுங்க!"

"நீங்க போகலாம்."

கட்சித் தலைவர், செயலாளர், பொருளாளர் மூவரும் உடனடியாக ஒரு மனதாக இரண்டாவதாக வந்தவரை வேட்பாளராக்க முடிவு செய்தனர்!

Wednesday, March 25, 2009

கடன் வசூல்

"சட்டையை விடுப்பா! இது நல்லால்ல!"

அந்த முரடனிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார் ஒரு முதியவர்.

"நீ மட்டும் கடனைத் தராம ஏமாத்திக்கிட்டே வர்றது நல்லாயிருக்கா?"

"கடனைத் திருப்பித் தர்றேன்னு சொல்றேனில்ல."

"எவ்வளவு நாளாச் சொல்லிக்கிட்டிருக்க!"

கடைவீதியில் கூட்டம் கூடிவிட்டது.

நடுத்தர வயதுக்காரர் ஒருவர் இடையில் புகுந்தார்.

"தம்பீ! பொஞ்சம் பொறுப்பா."

எவ்வளவு நாளா இந்தக் கெழவன் ஏமாத்திக்கிட்டே வர்றான்னு உங்களுக்கு தெரியாதுங்க."

"சரி, அவருதான் தர்றேன்னு சொல்றாரில்ல கொஞ்சம் டைம் கொடுத்துப் பாரு,"

"எத்தனை வாட்டிங்க தர்றது? நீங்களே கேட்டுச் சொல்லுங்க!"

நடுவராக வந்தவர் முதியவரிடம் "ஐயா, கொஞ்சம் கூடுதல் நாளானாலும் பரவாயில்ல. சொல்ற நாள்ல கரெக்டாக் குடுத்திரணும்" என்றார்.

"நீங்க சொல்லிட்டீங்கள்ல. கட்டாயம் கொடுத்துர்றேன்"

"எப்ப கொடுப்பீங்க?"

"தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியில கோஷ்டிப் பூசல் தீர்ந்த மறுநாளே கொடுத்திர்றேன்! போதுமா?"

மயங்கி விழுந்தார் நடுவர்!

Monday, March 23, 2009

வக்கற்ற வருண் காந்தி

அரசியலில் கொஞ்சம் தலை தூக்கத் தொடங்கிய வருண் காந்திக்கு எத்தனை பெரிய சம்மட்டி அடி!

உணர்ச்சி வசப்பட்டு ஆவேசமாகப் பேசியது தவறுதான். ஆனால் மன்னிக்க முடியாததல்லவே.

அவருடைய தந்தையின் மரணம் டில்லி சிம்மாசனத்துக்காக அடிமை வம்சக் காலத்திலிருந்தே நடந்து வந்த வாரிசுரிமைப் போரின் தொடர்ச்சி என்பதை உணர்ந்தவர்கள் மிக மிகக் குறைவனவர்களே!

அரசியல் கொலைகளை அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கும் இளவல்களுக்குள்ள வலுவான பின்னணி வருண் காந்திக்கு இல்லைதான்.
இந்தியத் தாலியணிந்த இத்தாலியப் பெண்மணி பெற்ற செல்வாக்கு மேனகா காந்திக்கு வந்துவிடக் கூடாதென்ற சதியின் பிந்திய அங்கமே வருண் காந்தியை வாடி வாசலிலேயே மடக்கிவிடும் திட்டம்.

வேதாந்தி கருணாநிதியின் தலைக்குத் தங்கம் பரிசளிப்பதாக பேசியது காற்றோடு போச்சு!

சுற்றுப் பயணத்தின் போது இரண்டு பேருக்குப் பணம் கொடுத்தாராம் வருண் காந்தி.

கிடா வெட்டி விருந்து கொடுத்து இலைக்கு அடியில் கரன்சி வைக்க வக்கற்றுப் போன வருண் காந்தி அரசியலுக்கு வந்தது எவ்வளவு பெரிய தப்பு!

பாபர் மசூதியை இடித்தவரைப் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க இடம் கொடுத்துள்ள இந்திய அரசியலமைச் சட்டம், குற்றவியல் சட்டம், தேர்தல் ஆணையம் அனைத்துமே வரிந்து கட்டிக்கொண்டு வருண் காந்தியின் மீது பாய முற்படுவதன் பின்னணியை நாம் சிந்திக்க மறந்தால் நாதியற்றவர்களின் தொகை நாடு முழுவதும் பெருகிவிடும்.

குடும்ப விவகாரம் கொலு மண்டபத்துக்கு வரும் இரண்டாவது "மனோகரா" தமிழ் நாட்டுடன் நின்றுவிடவில்லை என்பதையே வருண் காந்தி பிரச்சினை சுட்டிக் காட்டுகிறது.

Tuesday, March 17, 2009

உண்மையில் உயர்நீதி மன்றம்தான்!

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்ற கதையைத்தான் வழக்குரைஞர்கள் மீது கைவைத்த காவல் துறையின் செயல்பாடு நினைவூட்டுகிறது.

உயர்நீதி மன்ற வளாகத்துக்குள் தடியடி நிகழ்த்த ஆணை பிறப்பித்தவரைக் காப்பாற்ற அரசு படாதபாடுபடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா இடைக்கால அறிக்கையும் இரு தரப்பினரையும் சமமாகக் கருதும் "தென்காசி வழக்கைப்" பயன்படுத்தியுள்ளது.

தென்காசி வழக்கென்பது கடன் கொடுத்தவர் தாம் தந்த தொகை ரூ.1000/-என்று கூறும்போது, வாங்கியவர் ரூ.500/- தான் என அடித்துக் கூறும் நிலையில் இடையில் பஞ்சாயத்துப் பேசும் ஒருவர் ரூ.750/- தர வேண்டுமெனக் கூறும் தீர்ப்பைப் பற்றியது.

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் வழக்குத் தொடர்ந்தவர்களே நீதிபதிகளின் முன் நேரடியாக வந்து வாதாட வழிவகுக்கும் வகையில் ஆணை பிறப்பித்தது.

பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புகார் வழக்குரைஞர்களின் போராட்ட வீச்சைத் தணித்துவிடும் எனக் கருதிய வழக்குரைஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நான்கு இடங்களில் இலவசச் சட்ட உதவி முகாம் நடத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக வந்தவர்களுக்கும் புதிதாக வழக்குத் தொடர வந்தவர்களுக்கும் பரிவுடன் விவரங்களைக் கூறி நீதி மன்றத்துக்குள் அனுப்பி வைத்தது.

மொழி, இனம் என்னும் அடிப்படையில் தொடங்கப்பட்ட வழக்குரைஞர்களின் போராட்டம் மறைமுகமான வழியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.
இதுவரையிலும் அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்து வந்த உயர்நீதி மன்றத்துக்குள் தமிழ் நுழைந்துள்ளது! தங்கள் சார்பில் வாதாடும் வழக்குரைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை எதுவுமே புரியாமல் திகைத்துப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டுமென்றுதான் தமிழ்நாட்டில் உயர்நீதி மன்ற அலுவல் மொழியாகத் தமிழ் இடம் பெற வேண்டுமெனச் சமூக நீதிக்காகப் போராடுபவர்கள் கோரி வந்தனர்.

16-03-௨009 என்பது தமிழக நீதித்துறை வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட பொன்னாளாகும்.

மாசுக் கட்டுப்பாட்டு வழக்கில் வழக்கைத் தொடர்ந்தவர் இடைக்கால ஆணை பெற்றுள்ளார்.

கடனுக்காக ஏலம் விடும் வழக்கில் ஒருவர் இடைக்காலத் தடையாணை பெற்றிருக்கிறார்.

பலர் தமிழிலேயே வாதாடியிருக்கிறார்கள்.

அனைத்திலும் மேலாக நீதிபதி கலிபுல்லா தமிழில் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்! அருகிலுள்ள தலைமை நீதிபதி கோகலேவுக்கு அவ்வப்போது ஆங்திலத்தில் மொழிபெயர்த்துக் கூறியிருக்கிறார்!

விழுப்புர மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு என்னும் 70 வயதுப் பெண்மணி நீதிபதி சுதாகர் முன்பு நின்று சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக வாதாடியிருக்கிறார். அந்த வழக்கு விசாரணை கலகலப்பாகவும் அவ்வப்போது உருக்கமாகவும் நடந்ததாகச் செய்தித் தாளில் படித்தபோது மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகியது.

உயர்நீதி மன்றக் கட்டிடச் சுவர்களில் வழக்குரைஞர்கள் பேசும் செந்தமிழ் மூச்சுப் பட்டாலே செங்கல்லும் கவி பாடும்! முத்தமிழ் ஆய்ந்த பலர் வழக்குரைஞர்களாகவும் நீதிபதிகளாகவும் அமர்ந்துள்ள நிலையில் இன்று தமிழுக்குக் கிடைத்துள்ள உரிமை நீடிக்கப் பொதுமக்கள் போராட முன்வருவர்.

வெல்க வழக்குரைஞர்கள் போராட்டம்!

Monday, March 16, 2009

சிக்கினவை...(கவிதை)

நேரமில்லை தாமதம் கூடாது
சமைத்தே தீர வேண்டும்
குழம்புக்குப் பெயரா
குழப்பாதே
வெண்டைக்காய் முற்றியதால்
இல்லையொரு நஷ்டம்
கத்திரிக்காய் இல்லையா
அழுகிய தக்காளி போதும்
இங்கிலீஷ் காய்கறிகள்
கிராக்கியென்றாலும் விடாதே
சாதி மாங்காய் சேர்ந்தால்
அளவு கூடும் பந்தியை நிறைக்க
அவரை பட்டாணி பீன்ஸ்
எந்த இழவிலாவது ஒன்றைச் சேர்
வெங்காயம் வகை பாராதே
புளிதானென்று அடம் பிடிக்காதே
எலுமிச்சைக்கு வழிவிடு
சமையலிலாவது செய் புரட்சி!

டிக்கெட்! டிக்கெட்! (கவிதை)

சூட்கேஸ் விற்பனை அமோகம்,
ரிசர்வ் வங்கி ஆளுநரின்
உத்திரவாதம் யாருக்கு வேண்டும்!
திரையரங்கில், பேருந்தில்
டிக்கெட் வாங்கிப் பழக்கமில்லாத
வேட்டி, துண்டுகள்
கட்சி அலுவலகத்தில்
அலைகின்றன டிக்கெட்டுக்கு!
குறுக்கு வழிக்கென்றே
முறுக்கு மீசைகள் சில
கள்ள மார்க்கெட் கதவருகில்!
வைர மூக்குத்தி, நெக்லேஸ்,
தங்க வளையல், பட்டுப் புடவை
இப்படியும் ஒரு வழி
மூலவர் தரிசனத்துக்கு!

அக்ரஹாரக் கொடி எது?

பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியை அக்ரஹாரங்களில் பறக்கவிடப் போகிறாராம் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள க.ராமசுப்பிரமணியம் என்பவர். ("குமுதம் ரிப்போர்ட்டர்" 19-03௨009)

1967-ல் காங்கிரஸை, அதிலும் குறிப்பாகக் காமராஜரைத் தோற்கடித்த ராஜாஜியின் சுதந்திராக் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது.

"ஒரு கையால் பூணூலைப் பிடித்துக்கொண்டு மறு கையால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்" என்று பிராமணர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் ராஜாஜி.
அனாச்சாரமான கட்சிக்கு வாக்களிக்க நேர்ந்ததால் பூணூலின் புனிதம் கெட்டுவிடக் கூடாதென்று அப்படி ஓர் எச்சரிக்கை!

சுதந்திராக் கட்சியின் டாக்டர் ஹண்டோவைச் சட்டப் பேரவைத் தலைவராக்க மறுத்தார் அண்ணா. உடனே "தி.மு.க.வுடன் தேனிலவு முடிந்தது" என்று அறிவித்தார் ராஜாஜி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தம் கட்சியிலிருந்த நடிகர் விஜயகுமார் சபரிமலைக்கு மாலை போட்ட காரணத்தால் கட்சியைவிட்டு நீக்கினார்.

தமிழ்நாட்டுக்கு மூகாம்பிகை என்ற கடவுளைப் பின்னாளில் அறிமுகம் செய்தவரே எம்.ஜி.ஆர். தாம் என்பது எத்தகைய நகைமுரண்!

அண்ணாவுடன் பழகியவர்; அண்ணாவின் கொள்கைகளை நன்கு அறிந்தவர்; "திராவிட" என்ற சொல் கட்சியின் பெயரில் இடம் பெற்றுள்ள காரணத்தை உணர்ந்தவர்; "திராவிடம்" என்பதற்கு எதிரிடையான "ஆரியம்" என்பதை "ஆரியமாயை" நூலின் மூலம் தோலுரித்துக் காட்டியவர் அண்ணா என்பதை மறந்துவிட்டுத் தம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

நெருக்கடி நிலையின்போது கட்சியின் பெயருக்கு முன்னால் "அனைத்து இந்திய" என்ற சொற்களைச் சேர்த்த எம்.ஜி.ஆர். அதற்கான காரணத்தைக் காலம் வரும் போது சொல்வதாகக் கூறினார். இறுதிவரை அவர் கூறவுமில்லை; அதைக் கேட்குமளவு தைரியமுள்ள தொண்டர் எவரும் அந்தக் கட்சியில் இல்லை!

இதைச் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஜெயலலிதா கட்சியில் சேர்க்கப்பட்டபோது எவ்வித முணுமுணுப்பும் எழவில்லை என்பதற்கே.
தி.மு.க.விலிருந்து வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கும் யோசனை கூறி அதைச் செயல்படுத்தியவர்கள் 'தினமலர்' ராமசுப்பையர், 'இதயம் பேசுகிறது' மணியன், எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோர் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புத்த மதத்தின் வளர்ச்சியையும் வேத மதத்தின் வீழ்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் நேரடியாக எதிர்த்துப் பயனில்லை என உணர்ந்தார்கள். புதிய வழியொன்றைக் கண்டுபிடித்தனர். புத்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டோர் போன்று புத்த சங்கத்தில் ஏராளமான பார்ப்பனர்கள் சேர்ந்தனர். காலப் போக்கில் அதன் தலைமையைக் கைப்பற்றினர்!

அதன் விளைவு யாது? "கடவுளே இல்லை" என்று சொன்ன புத்தர் கடவுளாக்கப்பட்டார்! வரிசையாக உருவச்சிலைகள், கோயில்கள், வழிபாடு, கற்பனைக் கதைகள் என்று புத்தருடைய கொள்கைகளைப் புதைகுழிக்கு அனுப்பும் பணி தீவிரமானது.

வேத மதத்திற்கும் புத்த மதத்திற்கும் வேறுபாடுகள் மறைந்த நிலையில் புத்த மதம் நலிவுற்று; வேத மதம் தலை தூக்கியது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் அரங்கேறியுள்ளது.

சட்ட மன்றத்தில் "நான் பாப்பாத்திதான்" என்று ஜெயலலிதா "அண்ணா", "திராவிடம்" ஆகிய சொற்களை கட்சிப் பெயரிலும், அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் தாங்கியுள்ளது குறித்துச் சற்றேனும் அச்சமோ, நாணமோ கொள்ளாது அழுத்தமாகக் கூற முடிந்ததெனில் அது பரம்பரைப் பண்பு.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அணிகள் பிரிந்த சமயம் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு பிராமணர் சங்கம் பத்திகையில் விளம்பரம் வெளியிட்டது.

கோயில் வழிபாடு, யாகங்கள், புனித நீராடல், தீர்த்த யாத்திரை என்று ஜெயலலிதா அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபட்டதால் "தாங்கள் இன்னது செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்" கட்சியிலுள்ள ஆண்களும் பெண்களும் காவடி எடுப்பது, அலகு குத்துவது என்று அனைத்து மூட நம்பிக்கைகளுக்கும் புத்துயிரூட்டி வருகின்றனர்.
அக்ரஹாரத்தில் பறக்கும் அ.இ.அ.தி.மு.க. கொடிகள் அண்ணாவை ஒழித்துக் கட்டிய வெற்றியை முரசறைவன.

வடநாட்டில் மாயாவதி பேசும் மேடையில் தலைவர்கள் பலருடைய படங்களுடன் பெரியார் படமும் உள்ளது.

அண்ணாவை விழுங்கிய ஜெயலலிதாவை அடுத்துப் பெரியாரை விழுங்கப் புறப்பட்டுள்ளார் ராமசுப்பிரமணியம்.

"சரித்திர ரீதியாக பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் மோதல் வந்ததில்லை. அவர்கள் உடல் உழைப்பும் இவர்களின் மூளை உழைப்புமே இந்த மண்னையும் மக்களையும் வளப்படுத்தி நெறிப்படுத்தியிருக்கின்றன" என்ற ராமசுப்பிரமணியத்தின் கூற்று அகம்பாவத்தின் அடையாளம் என்றால் பிழையில்லை.

உடல் உழைப்பு X மூளை உழைப்பு

தமிழர்கள் தூங்குகிறார்களா, இல்லையா என்று சோதித்துப் பார்க்க அவ்வப்போது திமிர்த்தனமான இப்படிப்பட்ட ஒப்பீடு எழும்.
பாம்பு சிறிதாக இருந்தாலும் கம்பு பெரிதாக இருப்பதில் தவறில்லை. எம்.ஜி.ஆர். செய்த தவற்றின் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். திராவிடக் கட்சிகள் சொரணையோடு நடக்க முற்பட்டால் அக்ரஹாரத்தில் பா.ஜ.க. கொடி மட்டுமே பறப்பது பொருத்தமாக இருக்கும்.

தோழர்களே! அண்ணாவைப் பார்ப்பனப் பிடியிலிருந்து மீட்க வேண்டிய கடமையுடன் பெரியாரையும் இழந்து விடாதிருக்கும் பொறுப்பும் நமக்குள்ளது. இது மிகைக் கூற்றல்ல. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தின்போது என் போன்றோரின் கருத்து எவர் சிந்தனையிலும் பதியவில்லை. இப்போதாவது புரிந்து கொள்வது நன்று. ராமசுப்பிரமணியம் போட்டுள்ள நச்சு விதையைக் கண்டுகொள்ளாதிருப்பது அக்ரஹாரங்களின் அதிகாரம் இன்னும் வெளிப்படையாகக் கோலோச்ச வழிவகுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

Sunday, March 15, 2009

தமிழனின் தனிக் கொடி

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தால்தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். ('தினத்தந்தி' - 15-3-௨009)

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது சிறந்த யோசனை போன்றும் கூடுதல் அக்கறையுடன் கூறப்பட்டது போன்றும் தோன்றும். ஆனால் இது நாம் நிரந்தரமான மடையர்கள் என்ற அவருடைய எண்ணத்தை மெய்ப்பிக்கும் வாசகமாகும். "இலங்கை அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு" என்பதை மீண்டும் மீண்டும் பலர் கூறி வருகின்றனர்.
கேலிக்கூத்தின் சிகரமாக 09.03.2009-ல் உண்ணா நோன்பிருந்த ஜெயலலிதா "இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஈழப் பிரச்சனை குறித்து எவ்வித அக்கறையுமின்றி "விடுதலைப் புலிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்" என்று வீர வசனம் பேசியவாறு வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரைப் 'பொடா'வில் பதம் பார்த்தவர் அம்மையார்.

தா.பாண்டியன், வைகோ ஆகியோருடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் புலிகளுக்கு எதிரான கருத்தை முற்றிலும் மாற்றிக் கொள்ளத் தயங்கியபடி உளறிக் கொட்டியுள்ளார் ஜெயலலிதா.

இலங்கையின் அரசிலமைப்புச் சட்டத்தின்படி அந்நாடு இந்தியாவைப் போன்று ஒற்றையாட்சித் தன்மை கொண்டது. தலைநகர் கொழும்பு, தீவு முழுமைக்குமான ஆணைகளைப் பிறப்பிக்கும் வல்லமை உடையது. டில்லிக்கு அடங்கி நடக்க வேண்டிய இந்தியத் தமிழர்களாகிய நம் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கும் தீர்மானம் நிறைவேறினாலும் (அவ்வாறு நிகழ எவ்வித வாய்ப்புமில்லை) பொதுமக்களின் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற வேண்டும்!

ஜெயலலிதாவுக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவர் சந்தித்த மிகப் பெரிய இழப்பு ராஜீவ் காந்தி கொலையால் ஏற்பட்டதாகும்.

பழி வாங்கும் உணர்வில் சோனியா காந்திக்குத் தாம் எவ்வகையிலும் குறைந்தவர் அல்லர் என்பதை வெளிப்படுத்தத் தணியாத ஆர்வம் கொண்டவர்.

பிரணாப் முகர்ஜிக்குத் தெரிந்தாலும் இந்தியத் தமிழர்களை ஏய்ப்பதற்காகப் பொய் பேசுகிறார்.

இந்த விஷயத்தைத் தோழர் தியாகு மிக எளிதான உதாரணத்துடன் விளக்குவார். காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு கன்னட மக்களின் பெரும்பான்மைக் கருத்துப்படியே என்பது போல என்று!

"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன்"என்று எம். எம். மாரியப்பா உணர்ச்சி பொங்கப் பாடிய பாடலில், "தமிழனுக்கென தனிக் கொடியொன்றைத் தந்து மகிழடா தமிழா!"என உரத்து முழங்கிய வரி இன்றும் உயிரோட்டம் நிறைந்ததாகவே உள்ளதை உலகத் தமிழர்கள் உணரும்போது வரலாறு திரும்பும்; வாய்மை அரும்பும்!



தேர்தலோ தேர்தல்! - குறுங்கவிதைகள்

தீர்ப்பை மாற்றி எழுத
நாட்டாமையைக் கெஞ்ச வைத்தது
திருமங்கலம்!


தேர்தலில்
வாக்கின்விலைக்கு
அளவுகோல் தி.மு; தி.பி!


அடித்த கொள்ளையும்
அடிக்கப் போகும் கொள்ளையும்
விலை நிர்ணயக் காரணிகள்!

அக்கிரமம், அராஜகம், அநியாயம்
அனைத்தையும் மவுனமாக!
- தேர்தல் ஆணையப் பார்வையாளர்கள்!


வாக்குச் சாவடி
அது வேறு உலகம்
உனக்கும் எனக்கும் வேலையில்லை!

Monday, March 9, 2009

அழுகிய முட்டைகள்!

சோழர்கள் கட்டிய கோயிலைச்
சோற்றுத் துருத்திகள் கைப்பற்றியது
வேர்வை சிந்தியென்றால் உண்மைதான்-
கோல மயில்களும் மயக்குவிழி மான்களும்
வசந்த மண்டபக் குளிர் தென்றலிலும்
சந்தனம் குங்குமம் கரைந்து வழியச்
சிந்திய வேர்வையால்தான்!
சமஸ்கிருத மந்திரங்கள்
தென்னாடுடைய சிவன் மீது தொடுத்த
அழுகிய முட்டை வீச்சின்
தொடக்கமன்றோ!
சூட்சுமங்கள் கைவிட்ட நிலையில்
தீட்சிதர்களுக்குத் தோள் கொடுக்கச்
சோழவந்தான் சாமி
இட்லிக் கடைப் பூட்டை உடைத்த
தெம்புடன்!
மகளிர் அணியினர் வழங்கிய
தர்ம தரிசனத்தைவிடவா
நாற்றமெடுத்தது
அழுகிய முட்டை வீச்சு!
சிந்தனை அழுகிய
சித்து விளையாட்டுக்காரர் மீது
விழுந்த அவமானத்தால் அழுகிறது முட்டை!
இடைக்கால அறிக்கை
கிருஷ்ண, கிருஷ்ணா!
தடியடி, உதை, மிதிபட்டவர்களின்
மீது
தம் பங்குக்கு வீசிய
அழுகிய முட்டைகளால் நாறிக் கிடக்குது
உச்சநீதி மன்றம்!
---------------------------

Wednesday, March 4, 2009

உண்மையின் மறுபக்கம்

கே.எம்.விஜயன் ( ‘சத்யமேவ ஜெயதே...’ 24.02.09) ‘தினமணி’ கட்டுரைக்கு மறுப்பு கடிதம்.

"பிரிட்டிஷ்" அரசு நம்மை ஆளும் வரை மொழிவாரி மாநிலங்கள் இல்லை, எனவே, மொழியோ அல்லது தமிழினமான உணர்வோ அரசியலில் ஒரு பகுதியாக இருப்பதற்கான சாத்தியமும் தேவையும் இருக்கவில்லை," என்ற கட்டுரையாளாரின் கூற்று எந்த அளவுக்கு உண்மை என்று பார்ப்போம்.

பிரிட்டிஷாரின் வருகைக்கு முன்பு இந்தியா என்ற இறையாண்மையுள்ள ஒற்றை நாடு அல்லது அரசு அல்லது மாநிலங்கள் கிடையாது, 1947 ஆகஸ்ட் 15க்குப் பிறகும் தனிப்படை, தனிக்கொடி, தனி நாணயம் கொண்ட ஐநுற்றுக்கும் மேற்பட்ட சுதந்திரமான, சுயேச்சையான சுதேச சமஸ்தானங்கள் இருந்தன என்பதே உண்மை.
சர்தார் படேலின் நடவடிக்கைகளால் ஒற்றை ஆட்சியின் கீழ்க் கொண்டு வரப்பட்ட நிலப்பகுதிகளை இந்தியா என்ற நாட்டுடன் இணைத்த காலத்தில் மொழிவழி மாநிலங்கள் என எப்பகுதியும் காண முடியாது.
“1935க்குப் பிறகு, வெள்ளையருக்கு எதிராக தேசியவாதமே அரசியலின் கூற்றாக இருந்தது; இனமான உணர்வு இல்லை” என்பதும் பொருத்தமற்றதாகும்.
அன்றைய சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி இனமான உணர்வுடன்தான் செயல்பட்டது, பின்னாளில் திராவிடர் கழகமாக மாறியது.
சுதந்திரத்திற்கு முந்திய காங்கிரஸ் ஆட்சி ராஜக்ஜப் தலைமையில் நடந்தபோது இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தாளமுத்து. நடராசன் வீர மரணம் எய்தியது வரலாறு அல்லவா?
ஜின்னாவின் பாகிஸ்தான் தனி நாட்டுக் கோரிக்கை இந்திய தேசியவாதத்துக்கு எதிரானது அல்லவா?
“1950ஆம் ஆண்டு அரசியல் சட்டம் வந்து இநதியக் கூட்டாட்சியில் மொழிவாரி மாநிலமாகத் தமிழகம் மாறியவுடன், திராவிட முன்னேற்றக் கழகம் ‘தமிழ் மொழி’ உணர்வைத் தூண்டியதால் ஆட்சியைப் பிடித்தது” என்பது வரலாற்றைத் திரித்துக் கூறுவதாகும்.
1950ல் சென்னை மாகாணத்துடன் ஆந்திரம் இணைந்திருந்தது, தெலுங்கர்கள் தங்களுக்குத் தனி மாநிலம் கோக்ப். பொட்டி ஸ்ரிராமுலு உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்ததையொட்டி ஏற்பட்ட கலவரங்களுக்குப் பிறகே ஆந்திரம் தனி மாநிலமாயிற்று.
வாஞ்சி கமிசனை மத்திய அரசு அமைத்தது, அதன் பரிந்துரைகளின் பேரில் மொழிவழி மாநிலங்கள் உருவாயின. இரட்டை மொழி பேசும் பம்பாய் மாகாணம், மகாராஷ்டிரம், குஜராத் என இரு மாநிலங்களாகப் பிரிக்கப்படுவதை எதிர்த்துக் காங்கிரஸ்காரரான மொரார்ஜி தேசாய் உண்ணா நோன்பிருந்தார். எனினும் மக்களின் விருப்பப்படி இரு மாநிலங்கள் மொழிவழி உருவாயின.
“தமிழ் உணர்வில் அவர்கள்,(காங்கிரஸார்) எந்த வகையிலும் கழகத்தினருக்குப் பின் தங்கியவர்கள் அல்ல” என்ற கட்டுரையாளாரின் கூற்றை ஆய்வோம்.
ஆந்திரர்கள் “மதராஸ் நமதே!" என்று வலுவாக முழங்கிய காலத்தில் ம.பொ.சி. எல்லைப் போராட்டத்தை நடத்தித் திருத்தணி தமிழகத்துடன் இணைய வழியேற்படுத்தினார்.
மார்க்ஷல் நேசமணியின போராட்டத்தால் கேரளாவுடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம் நமக்குக் கிடைத்தது.
தேவிகுளம், பீர்மேடு பகுதிகளைத் தமிழகத்துடன் இணைக்கக் கோரி அண்ணா போராட்டம் நடத்தினார். ஆனால் காமராஜரோ ‘குளமாவது மேடாவது’ என்று கேலி பேசினார்.
சென்னை மாகாணம் சென்னை மாநிலமாக மாறியபின் நம் மாநிலத்துக்குத் ‘தமிழ்நாடு’ எனப் பெயர்மாற்றம் செய்யத் தி,மு,க, கோரியது.
விருதுநகரில் சங்கரலிங்கனார் தமிழ்நாடு பெயர் மாற்றக் கோரிக்கை உள்ளிட்ட பல கோரிக்கைகளுக்காக உண்ணா நோன்பிருந்து உயிர் நீத்தார்.
தமிழக காங்கிரஸ் அரசு, பெயர் மாற்றத்துக்கு இணங்கவில்லை. ’Madras State’ என்றால் யாருக்கும் தொரியாது என ஓங்கிக் கூறினர் அமைச்சர்களான சி,சுப்பிரமணியமும், பக்தவத்சலமும்.
ஆப்பிரிக்க நாடான "கோல்டு கோஸ்ட்" சுதந்திரம் பெற்றதுமே ‘கானா’ எனப் பெயர் மாற்றியது உட்படப் பல சான்றுகளைக் கூறியும் காங்கிரஸ் மறுத்தது.
இதில் என்ன வேடிக்கையெனில் சென்னை மாநிலக் காங்கிரஸ் கமிட்டியின் அதிகாரபூர்வமான பெயர் ‘தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி!’
கேரளா, ஆந்திரப்பிரதேஸ்க், கர்நாடகா என்று சுற்றிலுமுள்ள மாநிலங்கள் மொழிவழி, இனவழிபெயர்களை சூட்டியுள்ளபோது வீம்புக்காகத் தமிழ்நாடு என மாற்ற மறுத்ததன் பலனை இன்றுவரை அனுபவித்தும் இலங்கைத் தமிழர்கள் விக்ஷயத்தில் இன்னும் புத்தி வரவில்லை.
இந்திய அமைதிப்படை இலங்கை சென்று சாதித்தது என்ன?
“இந்தியத் தமிழர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தலையிட்ட இந்தியாவை அவமானப்படுத்தித் திரும்பச் செய்த சாரித்திரத்தைத் தமிழினத் தலைவர்கள் சௌகரியமாய் மறந்துவிட்டார்கள்” என்கிறஆர் கட்டுரையாளர்.
ராஜீவ் காந்தியை ஜெயவர்த்தனேவுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளச் சொன்னது யார்? விடுதலைப்புலிகளின் ஆயுதங்களைப் பிடுங்கிப் போடச் சொன்ன இந்தியத் தமிழர்களில் எவர் பெயரையாவது கூற முடியுமா?
ஜெயவர்த்தனேவிடம் ஏமாந்து கூலிப்படையாக ‘இந்திய அமைதிப் படை’ என்ற போர்வையில் சென்ற இந்திய ராணுவம் தமிழ் இளைஞர்களைச் சித்திரவதை செய்து கொன்று குவித்தும், வயது வேறுபாடின்றித் தமிழச்சிகளை வன்புணர்ச்சி செய்ததும், தமிழர்களின் சொத்துக்களை நாசப்படுத்திக் கொள்ளையடித்ததும் உண்மை அல்லவா?
இந்திய அமைதிப் படையில் முதன்முதலாகச் சென்ற கூர்க்காப் படைப் பிரிவினர் தாங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது இந்துக்களான தமிழர்கல் என்று அறிந்த மறுகணமே போராட மறுத்துத் தாயகம் திரும்பியது உண்மையா, இல்லையா?
“ராமதாஸ், வைகோ, திருமாவளவன், கருணாநிதி உள்பட அனைவருக்கும் சர்வதேச சட்டத்தின் கட்டுபாடுகளுக்கு உள்பட்டு இந்தியா இதில் எந்த வகையிலும் தலையிடமுடியாது என்று தொரியும்" எனக் கூறும் கட்டுரையாளர், இந்திராகாந்தியை அறிவிலி எனக் கருதுகிறாரா?
கிழக்குப் பாகிஸ்தானில் 'இனப்படுகொலை' நடப்பதாகப் பறையறைந்து, 'முக்திவாகினி' என்னும் போராளிக் குழுவுக்குப் பயிற்சியும் ஆயுதங்களும் தந்து, இறுதியில் பகிங்கரமாகப் போர் அறிவிப்புச் செய்து இந்திய ராணுவத்தை அனுப்பி வங்கதேசம் மலரச் செய்தாரே அவரைச் "சர்வதேசச் சட்டத்தின் கட்டுபாடுகள்" தடுத்தனவா?
சாதாரணமான இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியைச் சந்தித்துப் போரை நிறுத்தும்படி சொல்லத் தமிழக முதலமைச்சருக்கு ஒரு மாதகாலம் பிடிக்கிறது.
ஆனால், பாசில் ராஜபக்க்ஷ, மகிந்த ராஜபக்க்ஷ, ரணில் விக்ரமசிங்கே, சந்திரிகா குமாரதுங்க என்று சிங்களத் தலைவர்கள் எவர் வேண்டுமாயினும் பிரணாப் முகர்ஜியை எளிதில் சந்தித்து ஈழத் தமிழர்களை ஒழித்துக் கட்ட உதவிகள் பெற முடிகிறது.
“இருந்தும் தேர்தலுக்கு 'தமிழின பாசிச உணர்வு' உதவும் என்பதற்காக” என எழுதும் கட்டுரையாளர் ஈழ மண்ணில் ராஜ பக்க்ஷவின் கொடூரச் செயல்களையும் அவருக்கு உதவும் மத்திய அரசின் இனப்படுகொலை ஆதரவுச் செயல்களையும் 'பாசிச உணர்வு' கொண்டவை என்று கூற ஏன் மறுக்கிறார்?
ஈழத் தமிழர்களுக்கு எதிராகச் சர்வதேசச் சட்டங்களை மீறிப் படுகொலை நிகழ்த்தும் சோனியா காந்தி, மன்மோகன்சிங், பிரணாப்முகர்ஜி, ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம் போன்ற பாசிஸ்ட்டுகளை உலக நீதிமன்றத்தின் முன் நிறுத்தும் நாள் தொலைவில் இல்லை.