Tuesday, February 10, 2009

சகதியத்தான் சந்தனமா!

ராச பக்சே அடிச்சாரோ
ராணுவத்துப் பீரங்கியால்?
பொன்சேகா அடிச்சாரொ
கொத்துக் குண்டு வீச்சாலெ?

பாசில் பக்சே மாமன்தானே
பதுங்குகுழி தொளைச்சாரோ?
கொத்தபய மச்சான்தான்
கொன்னு குவிச்சாரோ?

சிங்களத்துப் படைகளெல்லாம்
சீரளிச்சுப் போச்சேன்னு
இங்குள்ள பொண்டுகள்ளாம்
கண்ணீரு சிந்துறாங்க!

ராச பக்சே அடிச்சாலும்? நம்ம
ராணுவத்தான் அழச்சது பார்!
பிரணாப்பு மொகர்சி யென்னும்
பிரியமுள்ள மனுசரல்லொ
ஆசையாத் தூது செல்ல
அந்தோணி டாங்கி தந்தார்!
நெசமாப் பிரதமரும்
நொறுக்கியே தள்ளச் சொன்னார்!

அவதியெல்லாம் படணுமா?
அகதிகளா வரணுமா?
சகதியத்தான் சந்தனமாப்
பூசலையோ நாங்களுந்தான்!

தடிதாங்கி அடிவாங்கிப்
பழகியே பூட்டமுல்ல!
இடிபொலக் கன்னடத்தான்
இடிச்சானே! அடிச்சானே!

முல்லைப் பெரியாறு சொன்னா
மூச்சடங்கப் போடுறானே!
தொல்லைக்கொரு எல்லையில்ல
தொடருதங்கே பாலாறு!

வாக்குரிமை தந்ததனால்
வாழ்வுரிமை கேட்டோமா?
போக்கிடமே இல்லையென்று
போறோமே சட்டசபை!

ஆகாதோ தொகுதி யெல்லாம்
அருமைத் திரு மங்கலமாய்!
வேகாததை ஆரு பாத்தா
வேணுந்தொகை எலைக்குக் கீழே!

ஒரு கிலொ அரிசியைத்தான்
ஒத்த ரூவா ஆக்கிட்டாரு!
வருமானம் இல்லேன்னாலும்
வண்ணத் தொலைக்காட்சி போதும்!

மானாட மயிலாட
மானமெல்லாம் காத்தாட
ஆணொடு பெண்ணொடு
அலுக்காமப் பாத்திருப்போம்!

ராசீவு எழவுக்குத்தான்
சோனியா அறுத்ததுன்னா
கூசாம இங்கேயுந்தான்
கட்டாம அறுக்குதொண்ணு!

பெங்களூரு முச்சந்தீல
பெரிய சாக்கு மூட்டையிலெ
எங்களூரு வள்ளுவரு
எளச்சிப் போயிக் கெடக்காரு!

வாச்சாத்தி மந்தையில
வளச்சு வளச்சுக் கெடுத்தவங்க
மேச்சாதிக் காரனுங்க
மேல போட்ட காக்கியால!

சாட்சி சனம் இல்லாம
சாக்குப் போக்குச் சொல்லாம
ஆட்சியத்தான் கலைப்பாங்க
ஆனாக் கூட்டு நெலைப்பாங்க!

பாரதத்து மாதாவுக்குப்
பாரமில்லாப் பிள்ளைகளாய்
ஓரமாய் ஒதுங்கி நின்னு
ஓங்கிச் சொல்வொம் செய்கிந்துன்னு!
அப்பாவிச் சனங்களுக்கு
ஒப்பாரி வைக்கணுமா ?
தப்பாமல் கேட்டுப் பாத்தா
தனித் தனியே அதுதானே!

Tuesday, February 3, 2009

காணவில்லை!

தேசியக் கொடியில்
திடீரெனக் காணவில்லை அசோகச் சக்கரம்
தேடிச் சென்றால்
ஈழத் தமிழர்களின் கழுத்தின் மீது!
காங்கிரஸ் கொடியில்
ராட்டை தொலைந்து வெகுநாட்களாயிற்று
ரத்தக்கறை படிந்த கை அந்த இடத்தில்!
ராஜீவ் போனாலென்ன
மனைவி கை, மகன் கை, மகள் கை!
மன்மோகன் சிங்குக்கு
அறுவைச் சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப்
பெருவியப்பு
இந்தியாவில் துடிப்பதன் எதிரொலி இலங்கையில்!
பழைய "மனோகரா" வசனப் புத்தகத்துடன்
உச்ச நீதிமன்றத்தின் பின்னே ஒருவர்
மஞ்சள் துண்டால் வியர்வை துடைத்தபடி!
காற்றுப் புரட்டிய பக்கத்தில்
"புறநானூற்றுப் புகழை மறைக்க வந்த
புழுதிக் காற்றே!"
மானம், வெட்கம், சூடு, சொரணை
மருந்துக்குக்கூடக் காணோமே!
மனைவியர், மக்கள், பேரன், பேத்திகள்,
பதவிகள், சொத்து, சுகம், நீடிக்கும் ஆயுள்;
முத்துக்குமார் செத்தாலென்ன,
பள்ளபட்டி ரவி செத்தாலென்ன,
ஈழத்தமிழனென்ன
ஈரோட்டுத் தமிழன் செத்தாலும்
இறங்கற்பா எழுத முடியாது;
பிடுங்கிச் சென்றுவிட்டாராம் பேனாவை
பிரணாப் முகர்ஜி!