Monday, April 27, 2009

இந்திய - இத்தாலியக் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஒரு குடும்பம்!

"கனிமொழி என் மகள். தருமாம்பாள் கனிமொழியின் தாய்" என்ற விசித்திர விளக்கத்துக்கு ஒரு குடும்பம்!

இந்தக் குடும்பங்களின் துணையோடு ஈழ மண்ணில் விடுதலைப் போரை நசுக்கும் நாசகார ராஜபக்சே குடும்பம்!

உலகத் தமிழர்கள் ஒரே குடும்பமாகும் நாளில் தமிழ் மண்ணில் கால் பதிக்க அஞ்ச வேண்டும் மயிருக்கு வாதாடும் மன்மோகன்; தலைப்பாகைக்குள் ஜெயில்சிங் செருப்புத் துடைத்த நினைவு பத்திரமாக!

"சுதந்திர தமிழ்நாடே எங்கள் லட்சியம்" என்ற பதாகை தந்தை பெரியாரின் வாழ்நாளில் கடைசி ஊர்வலம் நடத்திய மதுரை மாநாட்டில் தமுக்கம் கலையரங்க மேடையை அணி செய்ததை கருணாநிதி மறைக்கிறார்.

துணிவுடைமை, அஞ்சாமை பெரியாரின் பிறவிச் சொத்துக்கள்.

திரை விழுந்தது!

திரை விழுந்தது!

கருணாநிதியின் சரணாகதிப் படலம் உச்சகட்டக் காட்சியுடன் முடிந்திருக்கிறது.

சிவகங்கைச் சீமையில் வோட்டுப் பொறுக்கச் சிதம்பரத்துக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ஈழப் போரை முன்னின்று நடத்தும் சோனியா கும்பல், கருணாநிதிக்குக் கண் துடைப்புக் காட்சி நடத்த உதவி செய்ததுடன் தன் பொறுப்பைக் கை கழுவிவிட்டது.

காங்கிரஸ் தரப்பின் அபிஷேக் சிங்வி இன்னும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்னும் திமிரில் "இறையாண்மை உள்ள ஒரு நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது" என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

பாகிஸ்தானைப் பிளந்து வங்கதேசம் உருவாக இந்தியப் படையை அனுப்பிய இந்திரா காந்திக்கு "இறையாண்மை" என்றால் என்னவென்று தெரியாதெனக் கூறுகிறாரா?

சுதர்சனம் என்றொரு காங்கிரஸ்காரர் "சீனாதான் ஈழத்தில் போரை நடத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன்" என்று தமிழர்கள் அனைவர் காதிலும் பூ வைக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே சென்று கருணாநிதிக்கு ஆதரவாகச் சேலத்தில் உண்ணாவிரதம் நடத்தியிருக்கிறார்! சேலம் வாக்குகளைச் சேகரிக்க இப்படியோர் ஏமாற்று வேலை!

இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் ஆறாத ரணத்துடன் டைட்லர் விவகாரத்தில் செருப்பு வீச்சுக்குக் குனிந்து கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சீக்கியர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை சிதம்பரம். ஏறத்தாழ ஏழு மாதங்களாகப் பிரச்சனையை நீர்த்துப் போக வைக்க எல்லா வேலைகளையும் செய்த கருணாநிதியின் கடைசி முயற்சிதான் உண்ணாவிரத நாடகம்.

பிரணாப் முகர்ஜியும் அந்தோணியும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வசதியாகக் கால அவகாசம் வழங்கக் கருணாநிதி அரங்கேற்றிய காட்சிகளை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

சோனியா, பிரியங்கா, ராகுல் காந்திகளின் பழிவாங்கும் போக்குக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் கருணாநிதி உண்ணாநோன்பை நிறுத்தியதால் உயிர் பிழைத்திருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் அவருக்குப் பெருமை சேர்க்காது.

மரணம் நாட்டு விடுதலைக்காக என்று நிகழும்போது மாவீரன் இறவாப் புகழடைகிறான்.

ஆயுள் நீட்டிப்பு அவப் பெயருக்குக் காரணமாகும் அவலம் பரிதாபத்துக்குரியதுதான்!

Saturday, April 25, 2009

ஈழத்து வெண்பாக் கவிதைகள்


முத்துக் குமரன் முதலாய்த் தொடர்ந்துபல்லோர்
செத்துமடிகின்றார் செந்தழலில் - பித்துப்
பிடித்திங்கே நாற்காலிப் போட்டியில் சேர்ந்து
நடித்திடுவோர் நஞ்சாம் நமக்கு!


வான்படையும் கப்பல் வகைகளும் வீரமிகு
கான்படையும் எம்தமிழன் கோலமுடன் - தான்படைக்க
அற்றை வரலாறே அஞ்சிடுமே! ஈழமண்ணில்
இற்றைத் திறமே இனிது!


விந்தியம் கோடுபோட, விஞ்சுபுகழ்க் காப்பியன்
சிந்தனையில் வேங்கடம் சேராக - இந்தியம்
என்பதொரு மாயை என உணர்வீர்! ஆட்சியின்
வன்முறைக்கே ஆளானோம் வீணே!


சிவப்புக் கதிரோன் சினந்தெழுந்தான் தெற்கே!
தவப்புதல்வன் ஆயுதம் தூக்க - அவச்சொல்
ஒழிந்ததே; தாயகத்தின் ஒற்றுமை போலி
கிழிந்ததே தேர்தல் களத்து!


ஏசியும் ஏனரென ஏளனமாய்ப் பார்த்தபோதும்
கூசிவிடாமல் சோனியாவின் கூட்டுக்குள் - தேசியம்
பேசும் இழிதகையோர் பேரம் முடித்ததனால்
பூசும் புனைந்துரையும் போலி!

யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரியும்?
-------------------------
கடும் வறட்சியிலும் பூத்துக் குலுங்க
வியந்தோர் பல்லாயிரவர்-
நீர்தேடி அலைந்தவை வேர்கள்!

இப்படி ஓர் ஆறுதல்!
-------------------------
பள்ளத்தில் விழுந்தது பூனை
பதற்றம் தணிந்ததும் பெருமை-
யானைக்கு வெட்டிய குழுயாம்!

உரிமைக் குரல்!
--------------------
"சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை"
திலகரை வழிமொழிந்து இன்று
"சுயராஜ்ஜியம் எனது வாரிசுரிமை!"

சர்வம் எந்திரம் மயம்!

கட்டளையை ஏற்றுக்
கை உயர்த்தவும் கீழே போடவும்
ஏற்ற எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க
வாக்குப்பதிவு எந்திரத்தின் முன்
வரிசையாய்க் காத்து நிற்கின்றன
காசு வாங்கிய எந்திரங்கள்!

வெட்கம் என்ன விலை?

ஐந்தாண்டுக் காலத்தில்
சம்பளமும் சலுகைகளும்
ஒரு கேள்வியேனும் கேட்காத
ஊமைச்சாமிகளுக்கு!
மீண்டும் தொகுதி பெற்றுக்
கூப்பிய கரங்களுடன் வந்தால்
செவிப்பறையில் மோதும் ஒரு கேள்வியால்
சுளுக்கு நீங்கட்டும்
ருசிக்கெனவே பிறந்த நாக்குக்கு!