Sunday, May 3, 2009

ஒரு பானைச் சோற்றுக்கு...

"குமுதம்" 06-05-09 இதழில் காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணாவும் இந்தியக் கட்சியின் மாநிலச் செயளாளர் ("குமுதம்" அப்படித்தான் எழுதியுள்ளது) மகேந்திரனும் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து விவாதித்துள்ளனர்.

கோபண்ணா “1987-ல் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அந்த நாட்டோடு போட்டு, தமிழ்த் தாயகத்தில் தனி தமிழ் மாகாணமாக உருவாகவும், சிங்களவருக்கு இணையாக தமிளர்கள் வாழவும் ராஜீவ் காந்தி முயற்சி எடுத்தார்“ என்று கூறியுள்ளார்.
பிரச்சனை யார் யாருக்கிடையில்? ஜார்ஜ் பெர்னாண்டஸ் இந்த ஒப்பந்தம் குறித்து எளிய உதாரணத்துடன் விளக்கினார். கணவன்-மனைவிக்கிடையே தகராறு என்றால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் ஒப்பந்தம் போட்டு நடுவர் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும் "இருவரில் எவரேனும் மீறினால், மீறாதவருடன் நடுவர் இணைந்து மீறியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் இங்கே நடுவர் கணவனுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு மனைவியை மிரட்டுகிறார்".
இதைக் காட்டிலும் மிக எளிமையாக ராஜீவ் காந்தியின் முட்டாள்தனத்தை விளக்க முடியாது.
மேலும் கோபண்ணா கூறுகிறார்: "இன்றுகூட பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று ஆயுதத்தைப் போட்டு வந்தால் அதற்கான முயற்சியில் இந்தியா தலையிடத் தயார் என்று ப.சிதம்பரம் உள்பட அனைவரும் கூறிவிட்டனர். "தமிழ் ஈழம் சாத்தியமில்லை என்று பலமுறை சொல்லிவிட்டோம்."
அட, நாசமாப் போற காங்கிரஸ்காரர்களா! ஆயுதத்தைப் போடச் சொல்ல நீங்கள் யார்? இந்திரா காந்தி ஆயுதம் தரவில்லையா? இந்திய மண்ணில் ஆயுதப் பயிற்சி அளிக்கவில்லையா?
"பங்களாதேஷ்" சாத்தியமானபோது தமிழ் ஈழம் ஏன் சாத்தியமில்லை?
ஆயுதத்தைக் கீழே போடுவது தற்கொலைக்குச் சமம் என்பது தெரியாதா?
"ப.சிதம்பரம் உட்பட" என்றால் என்ன பொருள்?
சீக்கியன் செருப்பு வீசத்தயங்கமாட்டான் என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த சிதம்பரத்துக்குத் தமிழன் செருப்பைத் தொடமாட்டான் என்ற எண்ணமா?
கோபண்ணாவுக்குத் தமிழன் என்ற உணர்வு இல்லாமலிருக்கலாம். ப.சிதம்பரம் அப்படியா?
நாற்புறமும் கடல் சூழ்ந்துள்ள ஒரு குட்டித் தீவுக்குள்ளிருந்து கொண்டு கொடூரமான சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து ஆயுதங்களைக் கடத்திக் கொண்டு செல்வதும் போர்ப்பயிற்சி அளிப்பதும் சமகாலத் தமிழன் சாத்தியமாகியுள்ளது பெருமைக்குரிய விஷயமல்லவா?
முறத்தினால் புலியைத் துரத்தினாளே மறத்தி ஒருத்தி" என்ற பழங்கதைக்குப் பதிலாகப் போர்முனையில் நவீன ஆயுதங்களுடன் வீரப் பெண்கள் என்பதை இன்று ஈழந்தானே செயல்படுத்தியுள்ளது.
உலகிலேயே முதன்முறையாக வானூர்தியும் நீர்மூழ்கிக் கப்பலும் உள்ள போராளிக் குழு தமிழனுடையது என்ற பெருமை கோபண்ணாவுக்கு இல்லாதிருக்கலாம்; சிதம்பரத்தின் உள்மனசு பெருமிதம் கொள்ளாதிருக்குமா?
சோனியா கும்பலுக்குச் சேவகம் செஇவது தமிழ்நாட்டுக் காங்கிரஸ்காரர்களுக்குக் கேவலமாகத் தோன்றவில்லையா?
"புலிகள் தங்கள் சொந்த சகோதர அமைப்புகளையே காலி செய்தவர்கள்" என்னும் கோபண்ணா காங்கிரஸ் வரலாற்றைத் திருப்பிப் பார்க்க வேண்டும்.
சுதந்திரத்திற்கு முன்பே காங்கிரசில் தீவிரவாதிகளை ஓரங்கட்டியவர்கள் மிதவாதிகள். காந்தியின் அரசியல் நடவடிக்கைகளால் மனம் நொந்து வ.வு.சி. அரசியலைவிட்டே ஒதுங்கி மளிகைக்கடை வைக்கப் போனாரே, நினைவில் இருக்கிறதா?
சுதந்திரத்திற்காக மாற்று வழியில் போராடிய பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்றுமாறு நேருவும் சரோஜினி நாயுடுவும் காந்தியை மன்றாடிக் கெஞிக் கேட்டுக் கொண்டும் மறுத்தாரே காந்தி; அது எந்த வகையில் நியாயம்?
நேதாஜியின் வழியைப் புறக்கணித்த காந்தியின் அரசியல் வாரிசுகள் இன்றளவும் வரலாற்றில் இருட்டடிப்பு நடத்துவது தெரியாதா?
சோஷலிஸ்டுகளாகவும் கமூனிஸ்டுகளாகவும் சுதந்திரப் போராட்டத்தில் தியாகிகளாகத் தங்களை அழித்துக் கொள்ளத் தயாராக இருந்தவர்களை சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் நரவேட்டையாடியது மறந்துவிட்டதா?
காங்கிரஸ் செய்யாத படுகொலைகளா? காஷ்மீரில், நாகாலாந்தில், அஸ்ஸாமில், ஆந்திராவில், தமிழ்நாட்டில், இந்தியாவின் பிற மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி காவல் துறையையும் ராணுவத்தையும் கொண்டு கொன்று குவித்த அப்பாவிகளின் எண்ணிக்கைக்கு அளவுண்டா?
கோபண்ணாவின் கோமாளித்தனத்துக்கு இன்னுமொரு சான்று: "புலிகளிடமிருந்து அதிகாரப்பூர்வமாக போர்னிறுத்த அறிவிப்பு வர வேண்டும். இந்திய அரசு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யும்."
வெட்கங்கெட்ட காங்கிரஸ்காரர்களே! நார்வே நாடு பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது மறந்து போனதா?
ராஜீவ் காந்தி போராளிகளை ஒடுக்க நினைத்ததோடு இந்திய அமைதிப்படை என்றபெயரில் ஈழத்தில் செய்த அட்டூழியங்களை உலகெங்குமுள்ள தமிழர்கள் ஒருபோதும் மறக்கமாட்டார்கள்.
"தமிழ்நாடு" என்று சென்னை மாநிலப் பெயரை மாற்ற மறுத்த காங்கிரஸ்காரர்கள் இன்று கட்சியையும் மாநிலத்தையும் சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோரின் பாதங்களில் சமர்ப்பிக்கக் கைகட்டி, வாய் பொத்தி நிற்கும் இழிநிலையிலிருந்து மீண்டால்தான் தமிழர்கள் என்று சொல்லும் தகுதி ஏற்பட வழியுண்டு.

Saturday, May 2, 2009

கோமாளிகளின் காலம்!

அடிமைக் குல்லாவை அணிந்து கொண்டு இந்திய ராணுவத்துக்குத் தன் இனத்தைக் காட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கும் குலாம் நபி ஆசாத் அண்மையில் கருணாநிதியைச் சந்தித்தது எத்துணை பொருத்தமானது!

மஞ்சள் வணிகத்துக்கும் ஈரோட்டுக்குமுள்ள தொடர்பு மஞ்சள் துண்டு அணியும் கருணாநிதிக்கும் ஈரோட்டு நெடுஞ்சாலை பாதைக்கும் என்றால் மிகையன்று. மறைந்த நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதியின் இடத்தை நிரப்பக் கலைஞர் கருணாநிதி பொருத்தமானவரே!

சோனியா காந்தியைத் “தாயே“ என்று கெஞ்சியது ஒட்டுமொத்தத் தமிழினத்தையும் இழிவு செய்யும் செயல் என்பது தெரியாத அளவுக்குப் பச்சைக் குழந்தையாகவா மாறிவிட்டார்!

ஈழத் தமிழர்களுடன் தனக்குள்ள கணக்கைத் தீர்த்துக் கொள்ளத் திருட்டுத்தனமாக இந்திய ராணுவத்தை ஏவிய சோனியாவின் வஞ்சகத்தால் கொதித்தெழும் தமிழகத்தின் சினத்தை நீர்த்துப் போகச் செய்ய ஏழெட்டு மாதங்களாகக் கருணாநிதி செய்து வந்த கோமாளித்தனங்களுக்குக் கணக்கேது!

சென்னையில் கருணாநிதி “திடீர்“ உண்ணாவிரதம் உட்கார்ந்தால், படுத்தால் சேலத்தில் தங்கபாலு உண்ணாவிரதம் அறிவித்த கோமாளித்தனம் வாக்காளர்களை எரிச்சலடையச் செய்ததே மிச்சம்!

காங்கிரஸ் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி இந்திரா காந்தியையே கோமாளியாக்கத் தொடர்ந்து முனைகிறார். “இலங்கையின் இறையாண்மையில் இந்தியா எப்படித் தலையிட முடியும்" என்ற வாதத்தை அபிஷேக் மீண்டும் மீண்டும் முன்வைக்கிறாரே, வங்காள தேசம் உருவான வரலாறு எந்த நாட்டின் இறையாண்மையை ஊடுருவிய செயல் என்பது தெரியாதா? கருணாநிதியே ஒருமுறை வங்கதேச நிகழ்வை நினைவுபடுத்தியவர்தாம். பதவியைத் தக்க வைக்க நினைவாற்றலைத் தியாகம் செய்ய வேண்டிய பரிதாப நிலை!

குலாம் நபியிடம் இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பிறகும் குண்டு வீச்சு நடந்து பலர் இறந்துள்ளனரே என நிருபர்கள் கேட்டபோது “இதை அரசியல் லாபத்திற்காகச் சிலர் கூறுகிறார்கள். இலங்கையில் குண்டு போடுவதாக வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றது“ என்று கூறியுள்ளார். ஆதாரம் வேண்டுமென்றால் குலாம் நபியின் மீது குண்டு விழவேண்டியதுதான்!

"சி என் என்", "டைம்ஸ் நவ்" போன்ற தொலைக்காட்சிகள் காட்டிய ஆதாரங்கள் போதாதா? திமிர்! அப்பட்டமான திமிர்! சென்னையில் நின்று கொண்டே இதைக் கூற அருகில் நிற்கும் சுதர்சனம் என்னும் கோமாளியும் ஒரு காரணம். “சீனாக்காரன்தான் இலங்கையில் போர் செய்கிறான்’’ என்ற சுதர்சனத்துக்கு அந்தோணியைக் கண்டால் அப்படியொரு பயம்!

கவிஞர் கனிமொழி தொலைக்காட்சியில் அதிகமாகவே தோன்றினார் கருணாநிதி உண்ணாவிரத நிகழ்ச்சியில். குலாம் நபி ஆசாத்-கருணாநிதி சந்திப்பின்போதும் கனிமொழி உடனிருந்தார். மாநிலங்களவை உறுப்பினரானதும் தம் முதல் பேச்சில் அமெரிக்காவுடனான ஒப்பந்தம் குறித்து அளந்துவிட்டார். அபத்தமான வாதங்களை நாகரிகமான முறையில் ஜனகப்பிரியா என்னும் எழுத்தாளர் "காலச்சுவடு" என்ற இதழில் மறுத்து எழுதினார். கனிமொழிக்கு வந்ததே கோபம்! அரசின் கட்டுப்பாட்டிலுள்ள நூலகங்களில் "காலச்சுவடு" இடம்பெறக் கூடாதென ஆணை பிறப்பிக்கப்பட்டது! சீப்பை ஒளித்து வைக்கும் இந்த வேலை கோமாளித்தனமானது என்பது கருணாநிதிக்குத் தெரியாதா? தெரியும். எனினும் கையறு நிலையில் கருணாநிதி! குடும்பத்தில் அவர் செல்லாக்காசு!

ஈழப் பிரச்சினையில் தமிழகக் காங்கிரஸ்காரர்கள் கூசாமல் பொய் பேசி வருகின்றனர். கருணாநிதியின் உண்ணாவிரதத்தை நிறுத்தச் சிதம்பரம் உறுதிமொழி தந்தாராம்! மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோருக்கு ஈழத் தமிழர்களை ஒழிக்கும் முக்கியமான வேலை இருப்பதால் சிதம்பரத்துக்குக் கோமாளி வேடம் கட்டிவிட்டார்கள்!

தேர்தலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பாணியில் 40 இடங்களையும் கைப்பற்றிவிடலாமெனக் கருணாநிதி அணிக்கு அழுத்தமான நம்பிக்கை. காங்கிரஸ் கோமாளிகளையும் அவர்களுக்குத் துணை நிற்கும் கருணாநிதி வகையறாக் கோமாளிகளையும் பார்த்துச் சிரிப்பதுடன் நின்று கொள்வதே அறிவுடைமை.

Monday, April 27, 2009

இந்திய - இத்தாலியக் கூட்டுத் தயாரிப்பில் உருவான ஒரு குடும்பம்!

"கனிமொழி என் மகள். தருமாம்பாள் கனிமொழியின் தாய்" என்ற விசித்திர விளக்கத்துக்கு ஒரு குடும்பம்!

இந்தக் குடும்பங்களின் துணையோடு ஈழ மண்ணில் விடுதலைப் போரை நசுக்கும் நாசகார ராஜபக்சே குடும்பம்!

உலகத் தமிழர்கள் ஒரே குடும்பமாகும் நாளில் தமிழ் மண்ணில் கால் பதிக்க அஞ்ச வேண்டும் மயிருக்கு வாதாடும் மன்மோகன்; தலைப்பாகைக்குள் ஜெயில்சிங் செருப்புத் துடைத்த நினைவு பத்திரமாக!

"சுதந்திர தமிழ்நாடே எங்கள் லட்சியம்" என்ற பதாகை தந்தை பெரியாரின் வாழ்நாளில் கடைசி ஊர்வலம் நடத்திய மதுரை மாநாட்டில் தமுக்கம் கலையரங்க மேடையை அணி செய்ததை கருணாநிதி மறைக்கிறார்.

துணிவுடைமை, அஞ்சாமை பெரியாரின் பிறவிச் சொத்துக்கள்.

திரை விழுந்தது!

திரை விழுந்தது!

கருணாநிதியின் சரணாகதிப் படலம் உச்சகட்டக் காட்சியுடன் முடிந்திருக்கிறது.

சிவகங்கைச் சீமையில் வோட்டுப் பொறுக்கச் சிதம்பரத்துக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ஈழப் போரை முன்னின்று நடத்தும் சோனியா கும்பல், கருணாநிதிக்குக் கண் துடைப்புக் காட்சி நடத்த உதவி செய்ததுடன் தன் பொறுப்பைக் கை கழுவிவிட்டது.

காங்கிரஸ் தரப்பின் அபிஷேக் சிங்வி இன்னும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்னும் திமிரில் "இறையாண்மை உள்ள ஒரு நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது" என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

பாகிஸ்தானைப் பிளந்து வங்கதேசம் உருவாக இந்தியப் படையை அனுப்பிய இந்திரா காந்திக்கு "இறையாண்மை" என்றால் என்னவென்று தெரியாதெனக் கூறுகிறாரா?

சுதர்சனம் என்றொரு காங்கிரஸ்காரர் "சீனாதான் ஈழத்தில் போரை நடத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன்" என்று தமிழர்கள் அனைவர் காதிலும் பூ வைக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே சென்று கருணாநிதிக்கு ஆதரவாகச் சேலத்தில் உண்ணாவிரதம் நடத்தியிருக்கிறார்! சேலம் வாக்குகளைச் சேகரிக்க இப்படியோர் ஏமாற்று வேலை!

இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் ஆறாத ரணத்துடன் டைட்லர் விவகாரத்தில் செருப்பு வீச்சுக்குக் குனிந்து கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சீக்கியர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை சிதம்பரம். ஏறத்தாழ ஏழு மாதங்களாகப் பிரச்சனையை நீர்த்துப் போக வைக்க எல்லா வேலைகளையும் செய்த கருணாநிதியின் கடைசி முயற்சிதான் உண்ணாவிரத நாடகம்.

பிரணாப் முகர்ஜியும் அந்தோணியும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வசதியாகக் கால அவகாசம் வழங்கக் கருணாநிதி அரங்கேற்றிய காட்சிகளை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

சோனியா, பிரியங்கா, ராகுல் காந்திகளின் பழிவாங்கும் போக்குக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் கருணாநிதி உண்ணாநோன்பை நிறுத்தியதால் உயிர் பிழைத்திருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் அவருக்குப் பெருமை சேர்க்காது.

மரணம் நாட்டு விடுதலைக்காக என்று நிகழும்போது மாவீரன் இறவாப் புகழடைகிறான்.

ஆயுள் நீட்டிப்பு அவப் பெயருக்குக் காரணமாகும் அவலம் பரிதாபத்துக்குரியதுதான்!

Saturday, April 25, 2009

ஈழத்து வெண்பாக் கவிதைகள்


முத்துக் குமரன் முதலாய்த் தொடர்ந்துபல்லோர்
செத்துமடிகின்றார் செந்தழலில் - பித்துப்
பிடித்திங்கே நாற்காலிப் போட்டியில் சேர்ந்து
நடித்திடுவோர் நஞ்சாம் நமக்கு!


வான்படையும் கப்பல் வகைகளும் வீரமிகு
கான்படையும் எம்தமிழன் கோலமுடன் - தான்படைக்க
அற்றை வரலாறே அஞ்சிடுமே! ஈழமண்ணில்
இற்றைத் திறமே இனிது!


விந்தியம் கோடுபோட, விஞ்சுபுகழ்க் காப்பியன்
சிந்தனையில் வேங்கடம் சேராக - இந்தியம்
என்பதொரு மாயை என உணர்வீர்! ஆட்சியின்
வன்முறைக்கே ஆளானோம் வீணே!


சிவப்புக் கதிரோன் சினந்தெழுந்தான் தெற்கே!
தவப்புதல்வன் ஆயுதம் தூக்க - அவச்சொல்
ஒழிந்ததே; தாயகத்தின் ஒற்றுமை போலி
கிழிந்ததே தேர்தல் களத்து!


ஏசியும் ஏனரென ஏளனமாய்ப் பார்த்தபோதும்
கூசிவிடாமல் சோனியாவின் கூட்டுக்குள் - தேசியம்
பேசும் இழிதகையோர் பேரம் முடித்ததனால்
பூசும் புனைந்துரையும் போலி!

யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரியும்?
-------------------------
கடும் வறட்சியிலும் பூத்துக் குலுங்க
வியந்தோர் பல்லாயிரவர்-
நீர்தேடி அலைந்தவை வேர்கள்!

இப்படி ஓர் ஆறுதல்!
-------------------------
பள்ளத்தில் விழுந்தது பூனை
பதற்றம் தணிந்ததும் பெருமை-
யானைக்கு வெட்டிய குழுயாம்!

உரிமைக் குரல்!
--------------------
"சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை"
திலகரை வழிமொழிந்து இன்று
"சுயராஜ்ஜியம் எனது வாரிசுரிமை!"

சர்வம் எந்திரம் மயம்!

கட்டளையை ஏற்றுக்
கை உயர்த்தவும் கீழே போடவும்
ஏற்ற எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க
வாக்குப்பதிவு எந்திரத்தின் முன்
வரிசையாய்க் காத்து நிற்கின்றன
காசு வாங்கிய எந்திரங்கள்!