Thursday, January 22, 2009

தமிழன் என்றோர் இனம்

(ஐனசக்தி(11.04.07) இதழில் நான் எழுதிய கட்டுரை. இன்றைக்கு இது மிகவும் அவசியமாகும் எனக் கருதியதால் இங்கு பதிகிறேன்...)

" ஆண்டான்-அடிமை உறவைப் பேணி
இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய
கட்டாயம் ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது"

உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கு பெற்றுள்ள வங்கதேச வீரர்கள் அணிந்திருக்கும் உடைகளின் விற்பனை கொல்கத்தாவில் இப்பொழுது அமோகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

மேற்கு வங்க இளைஞர் கூறும் காரணம், நம் முரட்டுத் தோலை ஊடுருவிக் குத்திக்கொண்டு நிற்கிறது. ஷஷஇந்தியா சூப்பர் எட்டுக்குள் நுழைய முடியாத நேரத்தில், நம் பக்கத்து நாடான வங்கதேசம் நுழைந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய விசயம்தானே! வங்காளத்தில் கிழக்கு, மேற்கு என்று ஏன் நாம் பார்க்க வேண்டும்?

தமிழ்நாடு, கேரளா, குஜராத் என்ற எந்தவோர் மாநிலத்திலும் காண முடியாத காட்சியை மேற்கு வங்கத்தில் காண முடிகிறதென்றால் அங்கே "வங்காளி" என்ற உணர்வு மேலோங்கி நிற்கிறது. அது இயற்கையானதுதான்.

இடிஅமீனின் கொடுங்கோலாட்சியின் கோரத் தாக்குதலிலிருந்து தன் மாநில மக்களைக் காப்பாற்றி அழைத்து வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்தது கேரள அரசு.

மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட மக்கள் தங்கள் சொந்த பந்தங்களைக் காக்க மத்திய அரசுக்கு மனு அனுப்பிவிட்டு கையைக் கட்டிக் கொண்டு அமர்ந்திருக்கவில்லை. இறையாண்மையுள்ள ஒரு நாடு செய்ய வேண்டிய வேலையை குஜராத், கேரள மாநில அரசுகள் செய்தன.

ஆண்டாண்டு காலமாய் சிங்களப் பேரினவாத அரசின்கீழ் இரண்டாந்தரக் குடிமக்களாய் "தாழ்வுற்று வறுமை மிஞ்சிப் பாழ்பட்டு" நின்ற தமிழர்கள், அறவழிப்போராட்டங்கள் அலுத்துப்போன நிலையில் ஆயுதமேந்திய போராட்டமே தங்கள் விடிவுக்கான வழி என ஈழத் தமிழ் இளைஞர்கள் துணிவான முடிவு மேற்கொண்டது வரலாற்றுக் கட்டாயமாகும்.

விடுதலைப் போராளிகளை ஒடுக்க முயலும் எந்த ஒரு அரசும் அவர்களுக்குச் சூட்டும் முதற்பெயர் "பயங்கரவாதிகள்" என்பதாகும். இலங்கை அரசும் அதைத்தான் செய்தது.

அரசப் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு கவுரவம் பார்க்கும். "ஆயுதங்களை ஒப்படைத்த பின்புதான் பேச்சுவார்த்தை நடத்த முடியும்" என நிபந்தனை விதிக்கும். ஏராளமான தடைகளை எதிர்கொண்டு மிகுந்த சிரமங்களுக்கிடையில் ஆயுதங்களை உற்பத்தி செய்வது, பிற நாடுகளிடமிருந்து வாங்குவது ஆகியவற்றை மேற்கொண்டபின் வஞ்சக அரசிடம் ஆயுதங்களை ஒப்படைப்பது என்பது தற்கொலைக்குச் சமம் என்பதை உணர்ந்த போராளிகள் அரசின் நிபந்தனைக்கு இணங்க மறுப்பது இயல்பாகும்.

உலகின் எந்த மூலையில் விடுதலைப் போராட்டம் நடந்தாலும் வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தரும் இந்திய அரசின் கண்களில், ஈழ விடுதலைப் போராட்டம் மட்டும் பயங்கரவாதமாகத் தோன்றக் காரணம் என்ன?

யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை முன்னணி இயக்கத்துக்கு நிதியுதவி, டில்லியில் தூதரகம் திறக்க அனுமதி, ஐ.நா. சபையில் அங்கீகாரம் ஆகியவற்றைச் செயல்படுத்திய இந்திய அரசுக்கு ஈழத் தமிழர்களின் போராட்டத்தை நசுக்குவதில் மட்டும் ஏன் தனி அக்கறை?

ராஜீவ் படுகொலை என்ற விசயத்தை ஒரு காரணமாகக் கொண்டு இந்தியத் தமிழர்கள் தங்களுடைய நியாயம், நேர்மை, கடமை, இனஉணர்வு ஆகியவற்றிலிருந்து நழுவுவதிலேயே குறியாக உள்ளனர். தேர்தல், சட்டமன்ற, நாடாளுமன்ற இடங்கள், ஆட்சி, பதவி, சொத்துச் சேர்த்தல், சுகமான வாழ்க்கை, எவருடனும் எதற்காகவும் கூட்டணி வைத்துக் கொள்வதை நியாயப்படுத்துதல் என்பன இவர்களுடைய வாழ்க்கை முறைகளாக மாறிவிட்டன. தங்களைப் போன்று ஈழத்தமிழர்களும் சிங்கள அரசின் கொத்தடிமைகளாக வாழ்ந்து, மானம் பறிபோனாலும் வசதியாக வாழ முயற்சிக்க வேண்டுமெனக் கூறாமல் கூறுகின்றனர்.

உலகின் பல பகுதிகளிலும் வாழும் ஈழத் தமிழர்கள் ஈழ விடுதலைப் போருக்கான பல்வேறு பங்களிப்புகளை மிகவும் எச்சரிக்கையாகவும் ஆர்வத்துடனும் செய்து வருகின்றனர். எத்தனையோ மோசமான வாழ்நிலைக்கு நடுவிலும் அவர்கள் சமகாலத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குச் செய்து வரும் அளப்பரிய தொண்டு வியப்புக்குரியது.தமிழக மீனவர்கள் இன்று கடலுக்குச் செல்ல அஞ்சுகின்றனர். இந்தியக் கடல் எல்லைக்குள்ளேயே நம் மீனவர்களை சிங்கள கடற்படை சுட்டுக்கொல்கிறது.

மத்திய அரசைச் சங்கடப்படுத்தி விடக்கூடாது எனக் கருதும் மாநில அரசும், இலங்கை அரசைப் பகைத்துக் கொள்ளக் கூடாது எனக் கருதும் மத்திய அரசும் தமிழனுக்கு வாய்த்த சாபக்கேடுகள் என்றே தோன்றுகிறது.

கொழும்பில் உள்ள கட்டுநாயக விமானப்படைத் தளத்தின் மீது விமானத் தாக்குதல் நடத்திய போராளிகளின் வலிமை கண்டு சிங்கள அரசு அரண்டுபோய் நிற்கிறது. உலகிலேயே முதன் முறையாகப் போராளிக் குழு ஒன்று தனக்கென்று விமானப் படையை வைத்திருப்பது இதுவே முதல்முறை.

"கங்கை கொண்டான்", "கடாரம் வென்றான்", "இமயத்தில் கொடி நாட்டினான்", "கனக விசயரைக் கல் சுமக்க வைத்தான்" என்றெல்லாம் வாய் வலிக்காமல் பழம்பெருமை பேசி வரும் இந்தியத் தமிழர்கள் நின்று நிதானித்துச் சிந்திக்க வேண்டும். "வங்கக் கடல் சோழர்களின் ஏரியாக இருந்தது" எனத் தம்பட்டம் அடிப்பவர்கள் நிகழ்காலத்துக்கு வரவேண்டும்.

வரலாற்றிலேயே முதன்முறையாகத் தமிழன் விமானப்படை வைத்திருக்கிறான் என்ற மகிழ்ச்சியைக் கூடப் பகிர்ந்து கொள்ள முடியாமல் ஓரக்கண்ணால் டில்லியைப் பார்க்க வெட்கமாக இல்லையா?வடமாநிலங்களில் சில போராளிக் குழுக்களுடன் மத்திய அரசு போர் நிறுத்த ஒப்பந்தம் செய்திருப்பதையும் வேற்று நாட்டில் வைத்து அவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதையும் இந்தியத் தமிழர்கள் பலர் அறியாமல் இருக்கலாம்.

மிரண்டு போய் நிற்கும் சிங்கள அரசு, பயங்கரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் ஈழப் போராளிகளை அடக்கி ஒடுக்க இந்திய அரசினுடைய முப்படைகளின் உதவியை நாட முனைந்துள்ளது.

இந்திய மீனவர்களின் மீது பாயும் ஒவ்வொரு துப்பாக்கிக் குண்டும் இந்திய இறையாண்மையை ஓட்டையாக்கி வருவதை மத்திய அரசு உணரவில்லை. எவனோ சாகிறான் என்ற பொறுப்பற்ற தன்மையே தொடர்கிறது.

நாடுகளின் எல்லைகள் விரிவதும், சுருங்குவதும் சில நாடுகள் காணாமற் போவதும், புதிய நாடுகள் உருவாவதும் வரலாறு நெடுகிலும் நிகழ்ந்து வருவனவாகும். ஆண்டான்-அடிமை உறவைப் பேணி இலங்கையின் ஒருமைப்பாட்டைக் காக்க வேண்டிய கட்டாயம் ஈழத் தமிழர்களுக்குக் கிடையாது.

இனம், மொழி, பண்பாடு ஆகியவற்றைக் காக்க வீரப்போர் புரிந்து வரும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக நாம் ஏதும் செய்ய இயலாவிடினும் சிங்கள அரசுக்குத் துணைபோக இந்திய அரசை அனுமதியாதிருக்கும் செயலையாவது நாம் செய்தே தீர வேண்டும்.

இனத்தாலும் மொழியாலும் குருதி உறவுள்ள சொந்தம் அழிவதைப் பார்த்துக்கொண்டே இருந்த கல்நெஞ்சம் கொண்டோர் என்று இந்தியத் தமிழர்களுக்கு ஏற்படும் கறை எதிர்காலத்தில் கண்ணீராலும் செந்நீராலும் போக்க முடியாத அளவுக்கு அழுத்தமாகப் பதிந்து விடும்.

புறநானூற்றுப் புகழ் என்று பெருமையாகப் பேசப்படுவது வீர மரணம் எய்தும் ஈழத் தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமாகிவிடும்.

No comments:

Post a Comment