Thursday, January 29, 2009

ஒரு நாளில் அழுதுதீர்க்க...

சுவை மணக்கும் இலங்கைத் தேநீரைப் பருகிவிட்டு வர பிரணாப் முகர்ஜிக்கு ஒரு வழியாய் நேரம் கிடைத்தது மகிழ்ச்சிக்குரியதே!

"கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் இலங்கைக்கு அழைத்திருக்கிறார் ராஜபக்சே" என்ற தகவலைக் கூற ஒரு பயணம்! அட வெங்காயமே! போர் நிறுத்தம் செய்யச் சிங்கள அரசிடம் சொல்லச் சொன்னால் அந்த ஆள் சொன்னதை இங்கே வந்து ஒப்பிக்கிறாயே! சம்பளம் இந்திய அரசிடம், வேலைபார்ப்பது சிங்கள அரசுக்கா!

"போர் நிறுத்தம் என்பது இருதாப்பினரையும் உள்ளடக்கியதுதானே" என்று தா.பாண்டியனும் கருணாநிதியும் சொன்ன மறுநாளே விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தது ராஜபக்சேவுக்கு மறந்து போகக் காரணங்கள் இருக்கும். முகர்ஜிக்கு நினைவில் இல்லையா?

இந்த லட்சணத்தில் அந்த அம்மா "விடுதலைப்புலிகளுக்குக் கருணாநிதிதான் நண்பர். அவர் சொன்னால் கேட்பார்கள். நான் சொன்னால் கேட்கமாட்டார்கள்" என்று சொல்லிக் கருணாநிதியின் பயத்தை மேலும் அதிகமாக்கும் வேலையைச் செய்கிறார்!

பிப்ரவரி 15-ல் தி.மு.க. பொதுக்குழு கூடப் போகிறதாம். அதென்ன கணக்கு பிப்ரவரி பதினைந்து? ஈழத்தில் அலறித் துடிக்கும் சொச்ச மிச்சத் தமிழர்களும் அழிக்கப்பட்டபின் இரங்கற்பா எழுதித் 'தமிழினத் தலைவர்' பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ளவா?

வைகோ பிப்ரவரி 13-ல் டில்லியில் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப் போகிறாராம். ஒவ்வொரு நொடியும் ஈழத்தமிழன் செத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் நாளையே சென்னையில் தொடங்க வேண்டியதுதானே? இப்போது மற்ற கட்சியினரின் ஒருங்கிணைந்த இயக்கம் காரணமாக பிப்ரவரி 3-ல் செயற்குழு கூடுமென்கிறார்.

டில்லி சென்னையைத் தேடி வர வேண்டும். 1965 மீண்டும் நிகழ வேண்டும்.

ராமதாஸ், வைகோ, திருமாவளவன், பழ.நெடுமாறன், தா.பாண்டியன் ஆகியோர் அடங்கிய அணியுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் இந்த பிரணாப் முகர்ஜி.

அன்று காங்கிரஸ்காரர்களான நடுவண் அமைச்சர்கள் சி.சுப்பிரமணியமும் அளகேசனும் பதவி விலகியது போன்று இன்று 13 அமைச்சர்களும் வெளியேற வேண்டும்.

சிங்கள ராணுவத்துக்கு இந்திய ராணுவப் பீரங்கிகள் ஈரோட்டைத் தாண்டிச் சென்று உதவ முடிகிறதெனில் இங்குள்ள தமிழர்கள் இளித்தவாயர்கள் என்பதுதானே ஏ.கே. அந்தோணியின் நினைப்பு.

நிகழவிருக்கும் மூன்றாவது எழுச்சி தமிழின வரலாற்றில் ஒளிமயமான பகுதியைத் தொடங்குவதாக அமைய வேண்டும்.

No comments:

Post a Comment