Monday, April 27, 2009

திரை விழுந்தது!

திரை விழுந்தது!

கருணாநிதியின் சரணாகதிப் படலம் உச்சகட்டக் காட்சியுடன் முடிந்திருக்கிறது.

சிவகங்கைச் சீமையில் வோட்டுப் பொறுக்கச் சிதம்பரத்துக்கும் ஒரு பாத்திரம் வழங்கப்பட்டது. ஈழப் போரை முன்னின்று நடத்தும் சோனியா கும்பல், கருணாநிதிக்குக் கண் துடைப்புக் காட்சி நடத்த உதவி செய்ததுடன் தன் பொறுப்பைக் கை கழுவிவிட்டது.

காங்கிரஸ் தரப்பின் அபிஷேக் சிங்வி இன்னும் தமிழர்கள் இளித்தவாயர்கள் என்னும் திமிரில் "இறையாண்மை உள்ள ஒரு நாட்டு விவகாரத்தில் நாம் தலையிட முடியாது" என்பதை மீண்டும் அழுத்தமாகக் கூறினார்.

பாகிஸ்தானைப் பிளந்து வங்கதேசம் உருவாக இந்தியப் படையை அனுப்பிய இந்திரா காந்திக்கு "இறையாண்மை" என்றால் என்னவென்று தெரியாதெனக் கூறுகிறாரா?

சுதர்சனம் என்றொரு காங்கிரஸ்காரர் "சீனாதான் ஈழத்தில் போரை நடத்துகிறது. மத்திய அரசின் செயல்பாடுகளைப் பாராட்டுகிறேன்" என்று தமிழர்கள் அனைவர் காதிலும் பூ வைக்கிறார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் தங்கபாலு இன்னும் ஒருபடி மேலே சென்று கருணாநிதிக்கு ஆதரவாகச் சேலத்தில் உண்ணாவிரதம் நடத்தியிருக்கிறார்! சேலம் வாக்குகளைச் சேகரிக்க இப்படியோர் ஏமாற்று வேலை!

இருபத்திநான்கு ஆண்டுகள் கழித்தும் ஆறாத ரணத்துடன் டைட்லர் விவகாரத்தில் செருப்பு வீச்சுக்குக் குனிந்து கொடுக்க வேண்டிய நிலையை உருவாக்கிய சீக்கியர்களிடம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை சிதம்பரம். ஏறத்தாழ ஏழு மாதங்களாகப் பிரச்சனையை நீர்த்துப் போக வைக்க எல்லா வேலைகளையும் செய்த கருணாநிதியின் கடைசி முயற்சிதான் உண்ணாவிரத நாடகம்.

பிரணாப் முகர்ஜியும் அந்தோணியும் ஈழத்தமிழர்களைக் கொன்று குவிக்க வசதியாகக் கால அவகாசம் வழங்கக் கருணாநிதி அரங்கேற்றிய காட்சிகளை வரலாறு அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

சோனியா, பிரியங்கா, ராகுல் காந்திகளின் பழிவாங்கும் போக்குக்கு முற்றிலும் உடந்தையாக இருக்கும் கருணாநிதி உண்ணாநோன்பை நிறுத்தியதால் உயிர் பிழைத்திருக்கிறார் என்பது எந்தவிதத்திலும் அவருக்குப் பெருமை சேர்க்காது.

மரணம் நாட்டு விடுதலைக்காக என்று நிகழும்போது மாவீரன் இறவாப் புகழடைகிறான்.

ஆயுள் நீட்டிப்பு அவப் பெயருக்குக் காரணமாகும் அவலம் பரிதாபத்துக்குரியதுதான்!

1 comment:

  1. அன்பான எம் தமிழ் உறவுகளே...!!! தமிழ் ஊடகங்களே..!!!

    சாவின் விளிம்பில் நிற்கும் ஈழத்தமிழினத்தின் வேதனைகளையும் வலிகளையும் விலைபேசி விற்கும் தமிழகத்து அரசியல் சாக்கடை ஈனபிறவிகளின் கோமாளித்தனமான செயல்களையும்,அவர்களது உப்புசப்பில்லாத பேச்சுக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.
    உண்மையான தியாகத்தை புரிந்து தீயில் சங்கமமான முத்துக்குமார் போன்ற சகோதரர்களின் உணர்வுகளின் முன் இந்த அரசியல் கோமாளிகளின் அற்பத்தனமான செயல்கள் ஈழத்தமிழனையும் விடுதலைப்போராட்டத்தையும் கொச்சைப்படுத்துகின்றன.

    தேர்தல் வெற்றி ஒன்றே குறியாக கொண்ட இந்த கபட நரிகளின் பசப்பு வார்த்தைகளை இனியும் நம்ப ஈழத்தமிழன் எவனும் கேணையர்கள் இல்லை.

    ஈழத்தமிழனுக்கும் ஆதரவு என்ற மாயையை தமிழக மக்களிடம் ஏற்படுத்திவிட்டு காங்கிரசுக்கும் மத்திய அரசுக்கும் வால் பிடிக்கும் இந்த அரசியல் பரதேசிகளின் மனதில் என்ன இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரியும்.இருந்தாலும் அவ்வப்போது அவர்கள் விடுகின்ற உணர்வு பூர்வமான கயிறு திரிப்புகளுக்கும் அற்புத வாக்குறுதிகளையும் நம்பி நம்மில் சில பழமைவாதிகள் அவர்களை புகழ்ந்து பாடுவது படு கேவலமாக இருக்கிறது.

    உண்மையில் தமிழத்தின் தொப்புள் கொடி உறவுகள் ஈழத்தமிழர்கள் மேல் வைத்திருக்கும் அன்பும் பாசமும் வார்த்தைகளால் சொல்லமுடியாதவை.ஈழத்தமிழனின் வலிகளினை உளப்பூர்வமாக உணர்திருக்கும் அவர்களின் ஆத்மார்த்தமான துடிப்புகளின் முன் இந்த அரசியல் சனியன்களின் கபட நாடகங்கள் வலியில் துடித்துக்கொண்டிருக்கும் ஈழத்தமிழனின் வேதனையை மேலும் மேலும் அதிகரிக்கின்றது.

    'உண்ணாவிரதம்' என்ற சத்திய வேள்வித்தீ உருவான தேசத்தில் அந்த போராட்டத்தின் தார்ப்பரியத்தினையே கொச்சைப்படுத்தும் இந்த அரசியல் அசிங்கங்களினை இனியும் நம்பி எமக்கு நாமே மொட்டையடிக்கும் கேவலத்தினை செய்ய நாம் தயாரில்லை.

    தேர்தல் வெற்றி,பதவி,பணம் என்ற அற்பத்தனங்களுக்கு ஆசைப்பட்டு ஈழத்தமிழனின் வாழ்வாதார பிரச்சினையை தங்களது சுய லாபங்களுக்காக விலைபேசி விற்கின்ற இவர்களுக்கு தமிழக உறவுகள் சரியான தீர்ப்பினை வெகுவிரைவில் வழங்குவார்கள்.
    அன்புடன்
    தமிழ்ப்பொடியன்

    ReplyDelete