Saturday, April 25, 2009

ஈழத்து வெண்பாக் கவிதைகள்


முத்துக் குமரன் முதலாய்த் தொடர்ந்துபல்லோர்
செத்துமடிகின்றார் செந்தழலில் - பித்துப்
பிடித்திங்கே நாற்காலிப் போட்டியில் சேர்ந்து
நடித்திடுவோர் நஞ்சாம் நமக்கு!


வான்படையும் கப்பல் வகைகளும் வீரமிகு
கான்படையும் எம்தமிழன் கோலமுடன் - தான்படைக்க
அற்றை வரலாறே அஞ்சிடுமே! ஈழமண்ணில்
இற்றைத் திறமே இனிது!


விந்தியம் கோடுபோட, விஞ்சுபுகழ்க் காப்பியன்
சிந்தனையில் வேங்கடம் சேராக - இந்தியம்
என்பதொரு மாயை என உணர்வீர்! ஆட்சியின்
வன்முறைக்கே ஆளானோம் வீணே!


சிவப்புக் கதிரோன் சினந்தெழுந்தான் தெற்கே!
தவப்புதல்வன் ஆயுதம் தூக்க - அவச்சொல்
ஒழிந்ததே; தாயகத்தின் ஒற்றுமை போலி
கிழிந்ததே தேர்தல் களத்து!


ஏசியும் ஏனரென ஏளனமாய்ப் பார்த்தபோதும்
கூசிவிடாமல் சோனியாவின் கூட்டுக்குள் - தேசியம்
பேசும் இழிதகையோர் பேரம் முடித்ததனால்
பூசும் புனைந்துரையும் போலி!

No comments:

Post a Comment