Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, April 25, 2009

ஈழத்து வெண்பாக் கவிதைகள்


முத்துக் குமரன் முதலாய்த் தொடர்ந்துபல்லோர்
செத்துமடிகின்றார் செந்தழலில் - பித்துப்
பிடித்திங்கே நாற்காலிப் போட்டியில் சேர்ந்து
நடித்திடுவோர் நஞ்சாம் நமக்கு!


வான்படையும் கப்பல் வகைகளும் வீரமிகு
கான்படையும் எம்தமிழன் கோலமுடன் - தான்படைக்க
அற்றை வரலாறே அஞ்சிடுமே! ஈழமண்ணில்
இற்றைத் திறமே இனிது!


விந்தியம் கோடுபோட, விஞ்சுபுகழ்க் காப்பியன்
சிந்தனையில் வேங்கடம் சேராக - இந்தியம்
என்பதொரு மாயை என உணர்வீர்! ஆட்சியின்
வன்முறைக்கே ஆளானோம் வீணே!


சிவப்புக் கதிரோன் சினந்தெழுந்தான் தெற்கே!
தவப்புதல்வன் ஆயுதம் தூக்க - அவச்சொல்
ஒழிந்ததே; தாயகத்தின் ஒற்றுமை போலி
கிழிந்ததே தேர்தல் களத்து!


ஏசியும் ஏனரென ஏளனமாய்ப் பார்த்தபோதும்
கூசிவிடாமல் சோனியாவின் கூட்டுக்குள் - தேசியம்
பேசும் இழிதகையோர் பேரம் முடித்ததனால்
பூசும் புனைந்துரையும் போலி!

யாருக்குத் தெரியும்?

யாருக்குத் தெரியும்?
-------------------------
கடும் வறட்சியிலும் பூத்துக் குலுங்க
வியந்தோர் பல்லாயிரவர்-
நீர்தேடி அலைந்தவை வேர்கள்!

இப்படி ஓர் ஆறுதல்!
-------------------------
பள்ளத்தில் விழுந்தது பூனை
பதற்றம் தணிந்ததும் பெருமை-
யானைக்கு வெட்டிய குழுயாம்!

உரிமைக் குரல்!
--------------------
"சுயராஜ்ஜியம் எனது பிறப்புரிமை"
திலகரை வழிமொழிந்து இன்று
"சுயராஜ்ஜியம் எனது வாரிசுரிமை!"

சர்வம் எந்திரம் மயம்!

கட்டளையை ஏற்றுக்
கை உயர்த்தவும் கீழே போடவும்
ஏற்ற எந்திரத்தைத் தேர்ந்தெடுக்க
வாக்குப்பதிவு எந்திரத்தின் முன்
வரிசையாய்க் காத்து நிற்கின்றன
காசு வாங்கிய எந்திரங்கள்!

வெட்கம் என்ன விலை?

ஐந்தாண்டுக் காலத்தில்
சம்பளமும் சலுகைகளும்
ஒரு கேள்வியேனும் கேட்காத
ஊமைச்சாமிகளுக்கு!
மீண்டும் தொகுதி பெற்றுக்
கூப்பிய கரங்களுடன் வந்தால்
செவிப்பறையில் மோதும் ஒரு கேள்வியால்
சுளுக்கு நீங்கட்டும்
ருசிக்கெனவே பிறந்த நாக்குக்கு!

Monday, March 16, 2009

சிக்கினவை...(கவிதை)

நேரமில்லை தாமதம் கூடாது
சமைத்தே தீர வேண்டும்
குழம்புக்குப் பெயரா
குழப்பாதே
வெண்டைக்காய் முற்றியதால்
இல்லையொரு நஷ்டம்
கத்திரிக்காய் இல்லையா
அழுகிய தக்காளி போதும்
இங்கிலீஷ் காய்கறிகள்
கிராக்கியென்றாலும் விடாதே
சாதி மாங்காய் சேர்ந்தால்
அளவு கூடும் பந்தியை நிறைக்க
அவரை பட்டாணி பீன்ஸ்
எந்த இழவிலாவது ஒன்றைச் சேர்
வெங்காயம் வகை பாராதே
புளிதானென்று அடம் பிடிக்காதே
எலுமிச்சைக்கு வழிவிடு
சமையலிலாவது செய் புரட்சி!

டிக்கெட்! டிக்கெட்! (கவிதை)

சூட்கேஸ் விற்பனை அமோகம்,
ரிசர்வ் வங்கி ஆளுநரின்
உத்திரவாதம் யாருக்கு வேண்டும்!
திரையரங்கில், பேருந்தில்
டிக்கெட் வாங்கிப் பழக்கமில்லாத
வேட்டி, துண்டுகள்
கட்சி அலுவலகத்தில்
அலைகின்றன டிக்கெட்டுக்கு!
குறுக்கு வழிக்கென்றே
முறுக்கு மீசைகள் சில
கள்ள மார்க்கெட் கதவருகில்!
வைர மூக்குத்தி, நெக்லேஸ்,
தங்க வளையல், பட்டுப் புடவை
இப்படியும் ஒரு வழி
மூலவர் தரிசனத்துக்கு!

Sunday, March 15, 2009

தேர்தலோ தேர்தல்! - குறுங்கவிதைகள்

தீர்ப்பை மாற்றி எழுத
நாட்டாமையைக் கெஞ்ச வைத்தது
திருமங்கலம்!


தேர்தலில்
வாக்கின்விலைக்கு
அளவுகோல் தி.மு; தி.பி!


அடித்த கொள்ளையும்
அடிக்கப் போகும் கொள்ளையும்
விலை நிர்ணயக் காரணிகள்!

அக்கிரமம், அராஜகம், அநியாயம்
அனைத்தையும் மவுனமாக!
- தேர்தல் ஆணையப் பார்வையாளர்கள்!


வாக்குச் சாவடி
அது வேறு உலகம்
உனக்கும் எனக்கும் வேலையில்லை!

Monday, March 9, 2009

அழுகிய முட்டைகள்!

சோழர்கள் கட்டிய கோயிலைச்
சோற்றுத் துருத்திகள் கைப்பற்றியது
வேர்வை சிந்தியென்றால் உண்மைதான்-
கோல மயில்களும் மயக்குவிழி மான்களும்
வசந்த மண்டபக் குளிர் தென்றலிலும்
சந்தனம் குங்குமம் கரைந்து வழியச்
சிந்திய வேர்வையால்தான்!
சமஸ்கிருத மந்திரங்கள்
தென்னாடுடைய சிவன் மீது தொடுத்த
அழுகிய முட்டை வீச்சின்
தொடக்கமன்றோ!
சூட்சுமங்கள் கைவிட்ட நிலையில்
தீட்சிதர்களுக்குத் தோள் கொடுக்கச்
சோழவந்தான் சாமி
இட்லிக் கடைப் பூட்டை உடைத்த
தெம்புடன்!
மகளிர் அணியினர் வழங்கிய
தர்ம தரிசனத்தைவிடவா
நாற்றமெடுத்தது
அழுகிய முட்டை வீச்சு!
சிந்தனை அழுகிய
சித்து விளையாட்டுக்காரர் மீது
விழுந்த அவமானத்தால் அழுகிறது முட்டை!
இடைக்கால அறிக்கை
கிருஷ்ண, கிருஷ்ணா!
தடியடி, உதை, மிதிபட்டவர்களின்
மீது
தம் பங்குக்கு வீசிய
அழுகிய முட்டைகளால் நாறிக் கிடக்குது
உச்சநீதி மன்றம்!
---------------------------