Tuesday, March 17, 2009

உண்மையில் உயர்நீதி மன்றம்தான்!

"கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா" என்ற கதையைத்தான் வழக்குரைஞர்கள் மீது கைவைத்த காவல் துறையின் செயல்பாடு நினைவூட்டுகிறது.

உயர்நீதி மன்ற வளாகத்துக்குள் தடியடி நிகழ்த்த ஆணை பிறப்பித்தவரைக் காப்பாற்ற அரசு படாதபாடுபடுகிறது. ஸ்ரீ கிருஷ்ணா இடைக்கால அறிக்கையும் இரு தரப்பினரையும் சமமாகக் கருதும் "தென்காசி வழக்கைப்" பயன்படுத்தியுள்ளது.

தென்காசி வழக்கென்பது கடன் கொடுத்தவர் தாம் தந்த தொகை ரூ.1000/-என்று கூறும்போது, வாங்கியவர் ரூ.500/- தான் என அடித்துக் கூறும் நிலையில் இடையில் பஞ்சாயத்துப் பேசும் ஒருவர் ரூ.750/- தர வேண்டுமெனக் கூறும் தீர்ப்பைப் பற்றியது.

இந்நிலையில் சென்னை உயர்நீதி மன்றம் வழக்குத் தொடர்ந்தவர்களே நீதிபதிகளின் முன் நேரடியாக வந்து வாதாட வழிவகுக்கும் வகையில் ஆணை பிறப்பித்தது.

பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற புகார் வழக்குரைஞர்களின் போராட்ட வீச்சைத் தணித்துவிடும் எனக் கருதிய வழக்குரைஞர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு நான்கு இடங்களில் இலவசச் சட்ட உதவி முகாம் நடத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக வந்தவர்களுக்கும் புதிதாக வழக்குத் தொடர வந்தவர்களுக்கும் பரிவுடன் விவரங்களைக் கூறி நீதி மன்றத்துக்குள் அனுப்பி வைத்தது.

மொழி, இனம் என்னும் அடிப்படையில் தொடங்கப்பட்ட வழக்குரைஞர்களின் போராட்டம் மறைமுகமான வழியில் மிகப் பெரிய வெற்றியை ஈட்டியுள்ளது.
இதுவரையிலும் அலுவல் மொழியாக ஆங்கிலம் மட்டுமே இருந்து வந்த உயர்நீதி மன்றத்துக்குள் தமிழ் நுழைந்துள்ளது! தங்கள் சார்பில் வாதாடும் வழக்குரைஞர்கள் ஆங்கிலத்தில் பேசுவதை எதுவுமே புரியாமல் திகைத்துப்போய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை மாற வேண்டுமென்றுதான் தமிழ்நாட்டில் உயர்நீதி மன்ற அலுவல் மொழியாகத் தமிழ் இடம் பெற வேண்டுமெனச் சமூக நீதிக்காகப் போராடுபவர்கள் கோரி வந்தனர்.

16-03-௨009 என்பது தமிழக நீதித்துறை வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட பொன்னாளாகும்.

மாசுக் கட்டுப்பாட்டு வழக்கில் வழக்கைத் தொடர்ந்தவர் இடைக்கால ஆணை பெற்றுள்ளார்.

கடனுக்காக ஏலம் விடும் வழக்கில் ஒருவர் இடைக்காலத் தடையாணை பெற்றிருக்கிறார்.

பலர் தமிழிலேயே வாதாடியிருக்கிறார்கள்.

அனைத்திலும் மேலாக நீதிபதி கலிபுல்லா தமிழில் கேள்விகளைக் கேட்டிருக்கிறார்! அருகிலுள்ள தலைமை நீதிபதி கோகலேவுக்கு அவ்வப்போது ஆங்திலத்தில் மொழிபெயர்த்துக் கூறியிருக்கிறார்!

விழுப்புர மாவட்டத்தைச் சேர்ந்த சேட்டு என்னும் 70 வயதுப் பெண்மணி நீதிபதி சுதாகர் முன்பு நின்று சுமார் இருபது நிமிடங்களுக்கு மேலாக வாதாடியிருக்கிறார். அந்த வழக்கு விசாரணை கலகலப்பாகவும் அவ்வப்போது உருக்கமாகவும் நடந்ததாகச் செய்தித் தாளில் படித்தபோது மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகியது.

உயர்நீதி மன்றக் கட்டிடச் சுவர்களில் வழக்குரைஞர்கள் பேசும் செந்தமிழ் மூச்சுப் பட்டாலே செங்கல்லும் கவி பாடும்! முத்தமிழ் ஆய்ந்த பலர் வழக்குரைஞர்களாகவும் நீதிபதிகளாகவும் அமர்ந்துள்ள நிலையில் இன்று தமிழுக்குக் கிடைத்துள்ள உரிமை நீடிக்கப் பொதுமக்கள் போராட முன்வருவர்.

வெல்க வழக்குரைஞர்கள் போராட்டம்!

No comments:

Post a Comment