Sunday, March 15, 2009

தமிழனின் தனிக் கொடி

"பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு அளிக்க இலங்கை அரசு முன்வந்தால்தான் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண முடியும்" என்று வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். ('தினத்தந்தி' - 15-3-௨009)

மேலெழுந்தவாரியாகப் பார்க்கும் போது சிறந்த யோசனை போன்றும் கூடுதல் அக்கறையுடன் கூறப்பட்டது போன்றும் தோன்றும். ஆனால் இது நாம் நிரந்தரமான மடையர்கள் என்ற அவருடைய எண்ணத்தை மெய்ப்பிக்கும் வாசகமாகும். "இலங்கை அரசியலமைப்பு மற்றும் இறையாண்மைக்கு உட்பட்டு" என்பதை மீண்டும் மீண்டும் பலர் கூறி வருகின்றனர்.
கேலிக்கூத்தின் சிகரமாக 09.03.2009-ல் உண்ணா நோன்பிருந்த ஜெயலலிதா "இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டு ஈழத் தமிழர்களுக்குத் தனி நாடு வேண்டும்" என்று கூறியுள்ளார்.

ஈழப் பிரச்சனை குறித்து எவ்வித அக்கறையுமின்றி "விடுதலைப் புலிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவேன்" என்று வீர வசனம் பேசியவாறு வைகோ, பழ.நெடுமாறன் ஆகியோரைப் 'பொடா'வில் பதம் பார்த்தவர் அம்மையார்.

தா.பாண்டியன், வைகோ ஆகியோருடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் புலிகளுக்கு எதிரான கருத்தை முற்றிலும் மாற்றிக் கொள்ளத் தயங்கியபடி உளறிக் கொட்டியுள்ளார் ஜெயலலிதா.

இலங்கையின் அரசிலமைப்புச் சட்டத்தின்படி அந்நாடு இந்தியாவைப் போன்று ஒற்றையாட்சித் தன்மை கொண்டது. தலைநகர் கொழும்பு, தீவு முழுமைக்குமான ஆணைகளைப் பிறப்பிக்கும் வல்லமை உடையது. டில்லிக்கு அடங்கி நடக்க வேண்டிய இந்தியத் தமிழர்களாகிய நம் நிலைதான் ஈழத் தமிழர்களுக்கும்.

இலங்கை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தமிழர்களுக்குச் சம உரிமை வழங்கும் தீர்மானம் நிறைவேறினாலும் (அவ்வாறு நிகழ எவ்வித வாய்ப்புமில்லை) பொதுமக்களின் வாக்கெடுப்பில் பெரும்பான்மை பெற வேண்டும்!

ஜெயலலிதாவுக்கு இந்த உண்மை தெரியாமல் இருக்கலாம். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின் அவர் சந்தித்த மிகப் பெரிய இழப்பு ராஜீவ் காந்தி கொலையால் ஏற்பட்டதாகும்.

பழி வாங்கும் உணர்வில் சோனியா காந்திக்குத் தாம் எவ்வகையிலும் குறைந்தவர் அல்லர் என்பதை வெளிப்படுத்தத் தணியாத ஆர்வம் கொண்டவர்.

பிரணாப் முகர்ஜிக்குத் தெரிந்தாலும் இந்தியத் தமிழர்களை ஏய்ப்பதற்காகப் பொய் பேசுகிறார்.

இந்த விஷயத்தைத் தோழர் தியாகு மிக எளிதான உதாரணத்துடன் விளக்குவார். காவிரிப் பிரச்சினைக்குத் தீர்வு கன்னட மக்களின் பெரும்பான்மைக் கருத்துப்படியே என்பது போல என்று!

"இந்த உலகினில் இருக்கும் மாந்தரில் எழிலுடையோன் எங்கள் தமிழன்"என்று எம். எம். மாரியப்பா உணர்ச்சி பொங்கப் பாடிய பாடலில், "தமிழனுக்கென தனிக் கொடியொன்றைத் தந்து மகிழடா தமிழா!"என உரத்து முழங்கிய வரி இன்றும் உயிரோட்டம் நிறைந்ததாகவே உள்ளதை உலகத் தமிழர்கள் உணரும்போது வரலாறு திரும்பும்; வாய்மை அரும்பும்!No comments:

Post a Comment