Monday, March 16, 2009

அக்ரஹாரக் கொடி எது?

பகுஜன் சமாஜ் கட்சிக் கொடியை அக்ரஹாரங்களில் பறக்கவிடப் போகிறாராம் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள க.ராமசுப்பிரமணியம் என்பவர். ("குமுதம் ரிப்போர்ட்டர்" 19-03௨009)

1967-ல் காங்கிரஸை, அதிலும் குறிப்பாகக் காமராஜரைத் தோற்கடித்த ராஜாஜியின் சுதந்திராக் கட்சி தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது.

"ஒரு கையால் பூணூலைப் பிடித்துக்கொண்டு மறு கையால் தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்" என்று பிராமணர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் ராஜாஜி.
அனாச்சாரமான கட்சிக்கு வாக்களிக்க நேர்ந்ததால் பூணூலின் புனிதம் கெட்டுவிடக் கூடாதென்று அப்படி ஓர் எச்சரிக்கை!

சுதந்திராக் கட்சியின் டாக்டர் ஹண்டோவைச் சட்டப் பேரவைத் தலைவராக்க மறுத்தார் அண்ணா. உடனே "தி.மு.க.வுடன் தேனிலவு முடிந்தது" என்று அறிவித்தார் ராஜாஜி. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற புதிய கட்சியைத் தொடங்கிய எம்.ஜி.ஆர். தம் கட்சியிலிருந்த நடிகர் விஜயகுமார் சபரிமலைக்கு மாலை போட்ட காரணத்தால் கட்சியைவிட்டு நீக்கினார்.

தமிழ்நாட்டுக்கு மூகாம்பிகை என்ற கடவுளைப் பின்னாளில் அறிமுகம் செய்தவரே எம்.ஜி.ஆர். தாம் என்பது எத்தகைய நகைமுரண்!

அண்ணாவுடன் பழகியவர்; அண்ணாவின் கொள்கைகளை நன்கு அறிந்தவர்; "திராவிட" என்ற சொல் கட்சியின் பெயரில் இடம் பெற்றுள்ள காரணத்தை உணர்ந்தவர்; "திராவிடம்" என்பதற்கு எதிரிடையான "ஆரியம்" என்பதை "ஆரியமாயை" நூலின் மூலம் தோலுரித்துக் காட்டியவர் அண்ணா என்பதை மறந்துவிட்டுத் தம் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளராக ஜெயலலிதாவை நியமித்தார் எம்.ஜி.ஆர்.!

நெருக்கடி நிலையின்போது கட்சியின் பெயருக்கு முன்னால் "அனைத்து இந்திய" என்ற சொற்களைச் சேர்த்த எம்.ஜி.ஆர். அதற்கான காரணத்தைக் காலம் வரும் போது சொல்வதாகக் கூறினார். இறுதிவரை அவர் கூறவுமில்லை; அதைக் கேட்குமளவு தைரியமுள்ள தொண்டர் எவரும் அந்தக் கட்சியில் இல்லை!

இதைச் சுட்டிக் காட்ட வேண்டிய அவசியம் ஜெயலலிதா கட்சியில் சேர்க்கப்பட்டபோது எவ்வித முணுமுணுப்பும் எழவில்லை என்பதற்கே.
தி.மு.க.விலிருந்து வெளியேறிப் புதிய கட்சியைத் தொடங்கும் யோசனை கூறி அதைச் செயல்படுத்தியவர்கள் 'தினமலர்' ராமசுப்பையர், 'இதயம் பேசுகிறது' மணியன், எம்.எஸ்.உதயமூர்த்தி ஆகியோர் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். புத்த மதத்தின் வளர்ச்சியையும் வேத மதத்தின் வீழ்ச்சியையும் தாங்கிக் கொள்ள முடியாத பார்ப்பனர்கள் நேரடியாக எதிர்த்துப் பயனில்லை என உணர்ந்தார்கள். புதிய வழியொன்றைக் கண்டுபிடித்தனர். புத்தரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டோர் போன்று புத்த சங்கத்தில் ஏராளமான பார்ப்பனர்கள் சேர்ந்தனர். காலப் போக்கில் அதன் தலைமையைக் கைப்பற்றினர்!

அதன் விளைவு யாது? "கடவுளே இல்லை" என்று சொன்ன புத்தர் கடவுளாக்கப்பட்டார்! வரிசையாக உருவச்சிலைகள், கோயில்கள், வழிபாடு, கற்பனைக் கதைகள் என்று புத்தருடைய கொள்கைகளைப் புதைகுழிக்கு அனுப்பும் பணி தீவிரமானது.

வேத மதத்திற்கும் புத்த மதத்திற்கும் வேறுபாடுகள் மறைந்த நிலையில் புத்த மதம் நலிவுற்று; வேத மதம் தலை தூக்கியது.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்திய வரலாறு அண்ணாவின் கொள்கைகளுக்கு எதிராக அண்மையில் அரங்கேறியுள்ளது.

சட்ட மன்றத்தில் "நான் பாப்பாத்திதான்" என்று ஜெயலலிதா "அண்ணா", "திராவிடம்" ஆகிய சொற்களை கட்சிப் பெயரிலும், அண்ணாவின் உருவத்தைக் கொடியிலும் தாங்கியுள்ளது குறித்துச் சற்றேனும் அச்சமோ, நாணமோ கொள்ளாது அழுத்தமாகக் கூற முடிந்ததெனில் அது பரம்பரைப் பண்பு.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அணிகள் பிரிந்த சமயம் ஜெயலலிதாவின் சேவல் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு தமிழ்நாடு பிராமணர் சங்கம் பத்திகையில் விளம்பரம் வெளியிட்டது.

கோயில் வழிபாடு, யாகங்கள், புனித நீராடல், தீர்த்த யாத்திரை என்று ஜெயலலிதா அண்ணாவின் கொள்கைகளுக்கு நேர் எதிரான செயல்களில் ஈடுபட்டதால் "தாங்கள் இன்னது செய்கிறோம் என்ற உணர்வே இல்லாமல்" கட்சியிலுள்ள ஆண்களும் பெண்களும் காவடி எடுப்பது, அலகு குத்துவது என்று அனைத்து மூட நம்பிக்கைகளுக்கும் புத்துயிரூட்டி வருகின்றனர்.
அக்ரஹாரத்தில் பறக்கும் அ.இ.அ.தி.மு.க. கொடிகள் அண்ணாவை ஒழித்துக் கட்டிய வெற்றியை முரசறைவன.

வடநாட்டில் மாயாவதி பேசும் மேடையில் தலைவர்கள் பலருடைய படங்களுடன் பெரியார் படமும் உள்ளது.

அண்ணாவை விழுங்கிய ஜெயலலிதாவை அடுத்துப் பெரியாரை விழுங்கப் புறப்பட்டுள்ளார் ராமசுப்பிரமணியம்.

"சரித்திர ரீதியாக பிராமணர்களுக்கும் தலித்துகளுக்கும் மோதல் வந்ததில்லை. அவர்கள் உடல் உழைப்பும் இவர்களின் மூளை உழைப்புமே இந்த மண்னையும் மக்களையும் வளப்படுத்தி நெறிப்படுத்தியிருக்கின்றன" என்ற ராமசுப்பிரமணியத்தின் கூற்று அகம்பாவத்தின் அடையாளம் என்றால் பிழையில்லை.

உடல் உழைப்பு X மூளை உழைப்பு

தமிழர்கள் தூங்குகிறார்களா, இல்லையா என்று சோதித்துப் பார்க்க அவ்வப்போது திமிர்த்தனமான இப்படிப்பட்ட ஒப்பீடு எழும்.
பாம்பு சிறிதாக இருந்தாலும் கம்பு பெரிதாக இருப்பதில் தவறில்லை. எம்.ஜி.ஆர். செய்த தவற்றின் பலனை இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். திராவிடக் கட்சிகள் சொரணையோடு நடக்க முற்பட்டால் அக்ரஹாரத்தில் பா.ஜ.க. கொடி மட்டுமே பறப்பது பொருத்தமாக இருக்கும்.

தோழர்களே! அண்ணாவைப் பார்ப்பனப் பிடியிலிருந்து மீட்க வேண்டிய கடமையுடன் பெரியாரையும் இழந்து விடாதிருக்கும் பொறுப்பும் நமக்குள்ளது. இது மிகைக் கூற்றல்ல. ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசத்தின்போது என் போன்றோரின் கருத்து எவர் சிந்தனையிலும் பதியவில்லை. இப்போதாவது புரிந்து கொள்வது நன்று. ராமசுப்பிரமணியம் போட்டுள்ள நச்சு விதையைக் கண்டுகொள்ளாதிருப்பது அக்ரஹாரங்களின் அதிகாரம் இன்னும் வெளிப்படையாகக் கோலோச்ச வழிவகுக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

1 comment: